
விஜயகாந்த் நடித்த ‘ஹானஸ்ட்ராஜ்’ பட டைட்டிலில், தனுஷ் நடிக்கும் புதிய படம்..
விஜயகாந்த் நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் ஹானஸ்ட்ராஜ். தற்போது இப்பட டைட்டிலில் தனுஷ் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்..
தனுஷ் தற்போது ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ பட ரிலீஸில் பிஸியாக உள்ளார். இச்சூழலில், அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாவதால், ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் ரிலீஸானது தற்போது பிப்ரவரி 21-ம் தேதி வெளியாக இருப்பதாக புதிதாய் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, ‘இட்லி கடை’ என்ற படத்தையும் இயக்கி, ஹீரோவாகவும் நடித்து வருகின்றார் தனுஷ். படத்தில் நித்யா மேனன், சத்யராஜ் என பலர் நடித்து வருகின்றனர். கிராமத்து பின்னணியில் உருவாகும் ஒரு பீல் குட் படமான ‘இட்லி கடை’ ஏப்ரல் 10-ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
மேலும், சேகர் கம்முலா இயக்கத்தில் ‘குபேரா’ என்ற நேரடி தெலுங்கு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் ராஷ்மிகா, நாகர்ஜுனா ஆகியோரும் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றது; விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பும் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ‘வாத்தி’ படத்தை அடுத்து மேலும் ஒரு நேரடி தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது. அதாவது வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை இயக்கிய வெங்கி அட்லூரியுடன் தனுஷ் மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இப்படத்திற்கு ‘ஹானஸ்ட் ராஜ்’ என டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது.
விஜயகாந்த் நடிப்பில் 1994-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் தான் ஹானஸ்ட் ராஜ் என்பது நினைவுகூரத்தக்கது. ஒருவேளை அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, விஜயகாந்த் சில காட்சிகள் தனுஷுடன் நடிக்கப்படலாம் எனவும் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.!
