
ஆவணப்பட விவகாரம்: நயன்தாரா அணிந்த ஆடைகளுக்கும் காப்புரிமை வேண்டும்: தனுஷ் தரப்பு அதிரடி வாதம்..
தனுஷ்-நயன்தாரா இடையே நடைபெற்று வரும் ‘ஆவணப்பட விவகாரம்’ குறித்த விசாரணை நடைபெற்றது. இது தொடர்பாக எழுந்த காரசார விவாதங்கள் பார்ப்போம்..
தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ், ‘கடந்த 2015-ம் ஆண்டு ‘நானும் ரவுடி தான்’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரம் மற்றும் ஆடைகள் மீதும் காப்புரிமை பெற்றுள்ளது என்றும், அந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த நயன்தாரா, நெட்ஃபிக்ஸ் ஒளிபரப்பான ஆவணப்படத்தில் “28 வினாடிகள்” காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளார். இதன் மூலம் நயன்தாரா பதிப்புரிமைச் சட்டம், 1957-ன் விதிகளை மீறியுள்ளார். எனவே, அவருக்கு எதிராக சிவில் வழக்கு தொடர வேண்டும்’ என்றார்.
ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மீதும், படத்தின் காப்புரிமை அனைத்தும் என்னிடம் உள்ளது. என் படத்தில் நயன்தாரா அணிந்திருக்கும் ஆடைகள் மீது கூட எனக்கு காப்புரிமை உள்ளது.
மேலும், வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். எனவே, இதை கருத்தில் கொண்டு விசாரணைக்கு செல்லாம் என்று தனுஷ் தரப்பு வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதிட்டார்.
இதையடுத்து ஆஜரான ஆர்.பார்த்தசாரதி, வுண்டர்பாரின் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் சென்னையில் இல்லை, மாறாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருப்பதால், இந்த வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறி, வுண்டர்பாரின் மனுவை நிராகரிக்குமாறு நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.
மேலும், தயாரிப்பு நிறுவனம் 1957-ம் ஆண்டு பதிப்புரிமைச் சட்டம் 62-வது பிரிவின்படி காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்திலோ அல்லது நெட்ஃபிக்ஸ் அதன் பதிவு அலுவலகத்தைக் கொண்டிருப்பதால், கடிதங்கள் காப்புரிமைச் சட்டம், 1865-ன் பிரிவு 12 இன் படி, பம்பாய் உயர் நீதிமன்றத்தையோ அணுகியிருக்க வேண்டும்’ என்று பார்த்தசாரதி வாதிட்டார்.
இதற்கு பதிலளித்த பி.எஸ்.ராமன், 2015-ம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்திற்காக நயன்தாரா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது, தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் சென்னையில் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தில் இயக்கி வந்தது என்றும், படத்தின் ஒரு பகுதி சென்னையில் தான் படமாக்கப்பட்டது என்றும், நெட்ஃபிக்ஸ் வெளியிட்ட அந்த ஆவணப்படம் சென்னை உட்பட இந்தியா முழுவதும் வெளியிடப்பட்டது. எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய வுண்டர்பாருக்கு முழு உரிமை உண்டு’ என்றார்.
இவ்வாறு இரு தரப்பில் இருந்து வாதம் நடைபெற்ற நிலையில், பதிவு செய்துகொண்ட நீதிபதி வழக்கை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
