சந்தானம்-ஆர்யாவை கைது செய்யவேண்டும்: போலீஸில் புகார்..
ஆர்யா தயாரிப்பில், பிரேம் ஆனந்த் இயக்க, சந்தானம் நடித்துள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் மே 16-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு வந்த பிரச்சினை குறித்து காண்போம்..
அதாவது, டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ‘கோவிந்தா கோவிந்தா’ பாடலில் பெருமாளை கிண்டல் செய்திருப்பதாக சந்தானம், ஆர்யா மீது சேலம் பாஜக வழக்கறிஞர் அணி நிர்வாகி அஜித் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.
வலசையூரை சேர்ந்தவரான அஜித் தன் புகார் மனுவில் கூறியிருப்பதாவது, ‘இந்து மக்கள் கொண்டாடும் புனித ஸ்தலங்களில் ஒன்று ஆந்திராவில் இருக்கும் திருப்பதி ஏழுமலையான் கோவில். டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இந்துக்களின் மனம் புண்படும் வகையில் ‘கோவிந்தா கோவிந்தா’ கிசா 47 பாடலை வைத்திருக்கிறார்கள். திருப்பதி கோவிலை அசிங்கப்படுத்தி சந்தானம் மற்றும் ஆர்யா அந்த பாடலை உருவாக்கி இருக்கிறார்கள்.
‘பார்க்கிங் காசுக்கு கோவிந்தா, ஹீரோயின் நடிப்புக்கு கோவிந்தா, பாப்கார்ன் காசு கோவிந்தா..’ என கடவுளை அவமதிக்கும் வகையில் பாடியிருக்கிறார்கள்.
‘கோவிந்தா கோவிந்தா’ என மத வழிபாடு, சடங்குகளை பற்றி தவறாக பாடல் வைத்த சந்தானம், ஆர்யா ஆகியோரை கைது செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். அஜித் கொடுத்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் சந்தானம் தெரிவிக்கையில், ‘எனக்கு கடவுள் மீது அதிக பக்தி உள்ளது. கடவுளை ஒரு நாளும் கிண்டல் செய்ய மாட்டேன். ‘கோவிந்தா கோவிந்தா’ பாடலில் கடவுளை கிண்டல் செய்யவில்லை’ என கூறியுள்ளார்
இப்படத்தில் சந்தானம் சினிமா பட விமர்சகராக நடித்திருக்கிறார். அவரின் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்து வைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட பாடல்தான் ‘கோவிந்தா கோவிந்தா’ என சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்துக்களை அவமதிக்க, பாடல் வைத்திருக்கிறார் சந்தானம் என புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், இது குறித்து இந்து உணர்வாளர்கள் தெரிவிக்கையில், கதாபாத்திரங்களை உணர்த்த வேறு வரிகள் வராதா? இந்து மதத்தில் இருந்து கொண்டே இந்து மதத்தை அவமதிப்பது மேலும் மேலும் தொடர்கிறது. இதுவே வேற்று மதமாயின் நிலைமை என்ன ஆகும்? அப்படியென்றால், இந்துவானவர்கள் சகிப்புத்தன்மையோடு என்றும் இருங்கள் என்பதே தீர்வா?’ எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
முன்னதாக, வருகின்ற சட்டசபைத் தேர்தலில் உதயநிதி அழைத்தால் பிரச்சாரம் செய்வேன் என சந்தானம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
