Web Ads

இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?: சல்மான்கான் விளக்கம்

பாலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரமான சல்மான் கான் இன்னும் திருமணம் செய்து கொள்ள வில்லை. அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் காதல் உறவுகள், தனது உடல்நிலை குறித்து வெளிப்படையாக பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம், இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை? என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சல்மான் கான், ‘நான் இத்தனை ஆண்டுகளாக உழைத்து சேர்த்து சொத்துக்களை விவாகரத்தின் மூலமாக ஒரு பெண்ணுக்கு தர விரும்பவில்லை’ என்று கூறினார்.

59 வயதாகும் தமக்கு உடலில் பல நோய்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவருக்கு ‘ட்ரைஜெமினல் நியூராலஜியா’ என்ற நாள்பட்ட நோய் இருக்கிறது. இந்த நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு முகத்தில் அடிக்கடி ஷாக் அடித்தது போன்ற உணர்வு ஏற்படும்.

ட்ரைஜெமினல் நியூராலஜியா என்பது முகத்தில் உள்ள டிரைஜெமினல் நரம்பை பாதிக்கும் ஒரு நாள்பட்ட நரம்பியல் கோளாறை குறிக்கும். இந்த நோய் தாக்கும் பொழுது முகத்தில் மின்னல் வெட்டுவது போன்ற கடுமையான வலி ஏற்படும்.

பேசுவது, முகத்தை தொடுவது, சாப்பிடுவது போன்ற தினசரி செயல்பாடுகள் கூட இந்த வலியை அதிகரிக்கச் செய்யும். 2007-ம் ஆண்டு முதல் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வரும் அவர், 2011-ம் ஆண்டில் அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அதன் பின்னரே அவருக்கு இதிலிருந்து நிவாரணம் கிடைத்துள்ளது.

இந்த நோயுடன் போராடியதை அவர் வெளிப்படையாக பேசியதன் மூலம் இந்த அரிய, வேதனையான நிலையைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உதவியது.

இது தவிர சல்மான் கானுக்கு ‘மூளை அனியூரிசம்’ என்கிற நோய் உள்ளது. இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு மூளையில் உள்ள ரத்த நாளங்களில் சில இடங்களில் பலூன் போன்ற வீக்கம் ஏற்படும். இது மட்டுமல்லாமல் ‘ஆர்டெரியோவெனஸ் மால்ஃபார்மேசன்ஸ் என்கிற தீவிரமான பிரச்சனையும் இருக்கிறது. இந்த பாதிப்பு தமனி குறைபாடு என்று அழைக்கப்படுகிறது.

இந்த பாதிப்பு இருப்பவர்களுக்கு வலிப்பு, பார்வை குறைபாடு, நரம்பியல் குறைபாடு, கடுமையான தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இவ்வளவு கடுமையான பாதிப்புகளுடன் சல்மான் கான் போராடிவரும் நிலையிலும் அவற்றைத் தாண்டி தொழில் வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.

அவரது விடாமுயற்சி பலருக்கும் உத்வேகமாக விளங்குகிறது. அவர் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

bollywood actor salman health issues