ஜென்டில்மேன் என்பதற்கு எடுத்துக்காட்டு: ஏவிஎம்.சரவணன் மறைவுக்கு ரஜினி இரங்கல்..
திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம். சரவணன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86. வயது மூப்பு காரணமாக அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்திய திரைத்துறையின் பழமையான திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏவிஎம் ப்ரொடக்ஷன்ஸ். தமிழ் உட்பட பல்வேறு இந்திய மொழிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை ஏவிஎம் தயாரித்துள்ளது.
நடிகர்கள் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகியோரை வெள்ளித்துறையில் அறிமுகம் செய்த நிறுவனம். இதன் நிறுவனர் ஏ.வி.மெய்யப்பனின் மகன்களில் ஒருவர் ஏவிஎம் சரவணன். தங்களது திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் நிர்வாக ரீதியாக பல்வேறு பொறுப்புகளை ஏவிஎம் சரவணன் கவனித்துள்ளார். இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பையும் இவர் கவனித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றுள்ளார்.
வெள்ளை நிற ஆடையை அணிவது அவரது அடையாளமாக இருந்தது. அவரது மறைவுக்கு தமிழ் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் ஏவிஎம் ஸ்டுடியோ வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் ஏவிஎம் சரவணனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசும்போது,
‘மிகப்பெரிய மனிதர், ஜென்டில்மேன் என்பதற்கு எடுத்துக்காட்டு இவர்தான். இவர் எப்போதும் வெள்ளைத் துணி உடைத்துவது போல, இவர் உள்ளமும் வெள்ளைதான். சினிமாவை உயிருக்கு உயிராக நேசித்தவர். என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர். நான் ஏவிஎம் ஸ்டுடியோவில் 9 படங்களை செய்துள்ளேன். அந்த 9 படங்களும் பெரிய ஹிட். அதற்கு மெயின் காரணம் சரவணன் சார் தான் என்று சொன்னால் மிகையாகாது.
அவருடைய மறைவு என் மனசை ரொம்ப பாதிக்கிறது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.

