ரஜினியுடன் 4 மணி நேரம் உரையாடினேன்: வைரலாகிறது அமீர்கானின் பதிவு
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பாலிவுட் மெகா ஸ்டார் அமீர்கான் பேசிய நிகழ்வு, தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்துப் பார்ப்போம்..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ ஷூட் ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது. அங்கு ஷூட் முடிந்ததும் மீண்டும் படக்குழு சென்னைக்கு திரும்பவுள்ளது.
சத்யராஜ், சவுபின் சாகிர், உபேந்திரா ஆகியோர் இப்படத்தில் நடித்து வரும் நிலையில், பாலிவுட்டின் மாஸ் நடிகரான அமீர்கான் ‘கூலி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்ற செய்தி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்பு ரஜினியை நேரில் சந்தித்ததை பற்றி அமீர்கான் பேசிய விஷயங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.
மும்பையில் ஒரு ஹோட்டலில் ரஜினி தங்கியிருப்பதை அறிந்துகொண்ட அமீர்கான் அவரை சந்தித்து, ஹலோ சொல்வதற்காக அங்கே சென்றுள்ளார்.
ரஜினியை சந்தித்து ஒரு 5 நிமிடம் உரையாடிவிட்டு வரலாம் என நினைத்த அமீர்கான், சுமார் 4 மணி நேரம் ரஜினியுடன் உரையாடியிருக்கிறார். அந்த இனிய சந்திப்பு குறித்து அவர்,
‘தனது திரைப்பயணத்தில் ஆரம்ப கால கட்டத்தில் நடந்த விஷயங்களை பற்றியெல்லாம் மனம் விட்டு பகிர்ந்து கொண்டோம். அதனால், நேரம் போனதே எனக்கு தெரியவில்லை. தனக்கு இருந்த வேலையையும் விட்டுவிட்டு, ரஜினியுடன் உரையாடியது பேரானந்தம் தான்’ என தெரிவித்துள்ளார். அமீர்கானின் இந்த பதிவு இணையமெங்கும் வைரலாகி வருகிறது.
அப்படியே, அமீர்கான் சார்.. ‘கூலி’ படத்துல தனது கேரக்டர் பற்றி ரெண்டு வரியும் சொல்லிருந்தா, இன்னும் செம மாஸா தெறிச்சிருக்குமே.!