அஜித்-விஷ்ணுவர்தன் கூட்டணியில் புதிய படம் ஷூட் எப்போது?
மூன்றாவது முறையாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் குறித்த தகவல்கள் காண்போம்..
மகிழ் திருமேனி இயக்கிய ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித் ஆக்ஷன் ஹீரோவாக மிரட்டியிருக்கிறார். படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர் நடித்துள்ள இப்படம் பிப்ரவரி 6-ந் தேதி திரைக்கு வருகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய அஜித்தின் மற்றொரு படமான ‘குட் பேட் அக்லி’ படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.
மேலும் அர்ஜுன் தாஸ், பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ந் தேதி திரைக்கு வருகிறது.
இந்த இரண்டு படங்களின் ரிலீசுக்கு பின், அக்டோபர் மாதம் வரை எந்தப் படத்திலும் நடிக்கப் போவதில்லை என அறிவித்துள்ள அஜித், கார் ரேஸில் கவனம் செலுத்த உள்ளார். அக்டோபர் மாதத்திற்கு பின் அஜித்தின் 64-வது படத்தின் பணிகள் தொடங்க உள்ளது.
அப்படத்தை சிறுத்தை சிவா இயக்குவார் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது திடீர் திருப்புமுனையாக விஷ்ணுவர்தன் இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, இவர் அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை இயக்கியவர். ஆக, அஜித் – விஷ்ணுவர்தன் கூட்டணியில் உருவாக உள்ள இந்த திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரிக்க முனைவதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
அண்மையில், இப்படம் தொடர்பாக அஜித்-விஷ்ணுவர்தன் சந்திப்பு நிகழ்ந்தது நினைவுகூரத்தக்கது.