அஜித்துக்கு பத்மபூஷன் விருது: விஜய்யை தவிர, அரசியல்-திரை பிரபலங்கள் வாழ்த்து

Web Ads

பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ள அஜித்துக்கு, வாழ்த்து தெரிவித்துள்ள பிரபலங்களின் வாசகங்கள் வாசிப்போம் வாங்க..

நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இவ்விருதை பெறும் 5-வது தமிழ் நடிகர் அஜித் ஆவார்.

இதற்கு முன்னதாக சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் ஆகியோருக்கு மட்டுமே பத்ம பூஷன் விருது கிடைத்திருக்கிறது. இந்நிலையில், அஜித்துக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பாஜக சார்பில் அண்ணாமலை மற்றும் தமிழிசை செளந்தர்ராஜன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சீமான் வாழ்த்து: தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் அன்புத்தம்பி அஜித்குமார் அவர்களுக்கு இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து மிகவும் மகிழ்ந்தேன்.

தன் கடும் உழைப்பால், தன் கவிர்ந்திழுக்கும் நடிப்புத்திறனால் வெற்றிப்படங்கள் பல தந்து, லட்சக்கணக்கான ரசிகர்களின் பேரன்பினையும் பெற்று, தமிழ்த் திரைத்துறையில் உச்சம் தொட்ட தம்பி அஜித் அவர்கள், மகிழுந்து பந்தயத்திலும் பெரும் ஈடுபாடு கொண்டு, அண்மையில் அவரது அணி வெற்றிவாகை சூடி வரலாறு படைத்தது பேருவகை அளித்தது.

திரைத்துறையோ, விளையாட்டோ தேர்ந்தெடுத்த துறை எதுவானாலும் தம்முடைய அயராத முயற்சியால் தனிமுத்திரை பதித்து, சாதனை படைக்கும் தம்பி அஜித்குமார் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பத்மபூஷன் விருதானது தகுதி வாய்ந்தவருக்கு மிகச்சரியாக வழங்கப்பட்டுள்ள விருதாக கருதுகிறேன். அன்புத்தம்பி அஜித்குமார் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், வாழ்த்துகளும்!

எடப்பாடி பழனிசாமி வாழ்த்து: நாட்டின் உயரிய குடிமக்கள் விருதுகளுள் ஒன்றான ‘பத்ம பூஷன்’ விருது பெறத் தேர்வாகியுள்ள தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர், கலை, விளையாட்டு, ட்ரோன் வடிவமைப்பு என பல்துறைகளில் தனக்கென தனிமுத்திரை பதித்துள்ள அன்புச் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். இன்னும் பல சிகரங்களைத் தொட்டு, நம் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் மென்மேலும் புகழ் சேர்க்க வாழ்த்துகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விஜய் மட்டும் மௌனமாய் இருக்கிறார். தனக்கு விருது கிடைக்காத விரக்தியில் அவர் இருப்பதாக நெட்டிசன்கள் கொளுத்திப் போட்டு வருகின்றனர்.

தற்போதைய அரசியல் சூழலில், விஜய் தொலைபேசி வாயிலாக அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், விஜய் தரப்பில் இருந்து இதுவரை எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கியதில் பாஜகவின் அரசியல் இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இதற்கு முன்னர், கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கியபோது, ரஜினிக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருதை அறிவித்ததை போல், தற்போது விஜய் தங்களுக்கு எதிராக அரசியலில் குதித்துள்ளதால் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டு இருப்பதாக ஒப்பிட்டு பேசி வருகிறார்கள் இணையவாசிகள்.

அரசியல் கட்சித் தலைவர்கள் போட்டிபோட்டு அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து வருவது 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அவரது ரசிகர்களின் வாக்குகளை பெறுவதற்காக எனவும் விமர்சிக்கப்படுகிறது.

ajith for padma bushan award vijay remain silent