பாஜக.வில் இருந்து விலகி, தவெக.வில் சேர்ந்ததற்கு காரணம்?: நடிகை ரஞ்சனா விளக்கம்..
இதுவரையான அரசியல் வரலாற்றில், கட்சித்தாவலுக்கு ஆயிரம் காரணங்கள் கேட்டாயிற்று. அதில், நடிகை ரஞ்சனா சொல்லும் காரணம் காண்போம்..
‘ஜனநாயகன்’ படப் பணிகள் முடிந்ததும் தமிழ்நாடு முழுவதும், அரசியல் பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பாஜக பிரமுகர் இன்று தவெக.வில் இணைந்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநில செயலாளராக இருந்து வந்தவர் ரஞ்சனா நாச்சியார். இவர் அரசு பேருந்துகளில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை கண்டித்த நிலையில் பிரபலமானார். மேலும் இவர் சின்னத்திரைகளிலும் நடித்துள்ளார்.
‘மும்மொழிக் கொள்கை திணிப்பு, திராவிடத்தின் மீதுள்ள வெறுப்பு, தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழகம் என்பதெல்லாம் தமிழச்சியாக என்னால் ஏற்றுக்கொண்டு இயங்க முடியவில்லை. என்னை சிறப்பாக இயக்க பாஜக தவறிவிட்டது.
பெண்களுக்கு முன்னேற்றம் தரும் தலைமை என்ற பயணத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கி விட்டேன்’ என தற்போது, தவெகவின் 2-ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ரஞ்சனா நாச்சியார், தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர் அவர் பேசும்போது,
‘எந்த மொழிக்கும் நாம் எதிரி கிடையாது. ஆனால், ஒரு மொழியை திணிக்கும் போது அதனை எப்படி ஏற்க முடியும். அதனால்தான் பாஜகவில் இருந்து விலகினேன். இனிமேல் எனது அரசியல் கொள்கைகள் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளாகத் தான் இருக்கும்.
மேலும், தமிழக வெற்றிக் கழகம்தான் தமிழ்நாட்டின் வெற்றிக் களமாக மாறவுள்ளது. அதனை தமிழ்நாட்டு மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள். களம் ரொம்பவே சூடாக தான் இருக்கப்போகிறது. இன்னும் 10 மாத காலத்திற்கும் தமிழ்நாடு அரசியல் களம் தேர்தலை நோக்கி நகர உள்ளதால், அரசியல் களம் சூடாகத்தான் இருக்கப் போகிறது.
பெண்களுக்கான பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் தளபதி விஜய் கவனம் செலுத்துவார் என்ற நம்பிக்கை பலருக்கும் உள்ளது. அதில், நானும் அங்கம் வகிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தவெகவில் இணைந்துள்ளேன்’ என பேசினார்.
