மாநாட்டு மேடையில், விஜய் வேறு மாதிரி தெரிந்தார்: நடிகை ராதிகா விமர்சனம்..
பொதுவாக, எதுவும் பேசாமல் கம்முனு உம்முனு இருக்கிறதை விட, மனசுல உள்ளதை பகிர்வது தீர்வுக்கு வழி வகுக்கும் தானே. இதில், விமர்சனம் எழுவது இயல்பாகி விட்டது.
பட்டமரம் கல்லடி படாது, பழுத்த மரம் தானே கல்லடி படும். விஷயம் என்னன்னா.. தவெக மாநாட்டில், விஜய்யின் கன்னிப்பேச்சு குறித்து ராதிகா சில விஷயங்களை கூறியிருக்கிறார். அது குறித்து பார்ப்போம்.
விக்கிரவாண்டியில், விஜய் தனது தவெக கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார்.
மாநாட்டில் பேசுகையில், ‘பிளவுவாத சக்திகளும், ஊழல் சக்திகளும் நமது முதல் எதிரி. அவர்களை பாசிசம் என்று இங்கிருப்பவர்கள் சொல்கிறார்கள்.
அவர்கள், பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா’ என்று கேள்வி எழுப்பினார். மேலும், எனது கரியர் உச்சத்தில் இருக்கும்போது அரசியலுக்கு வந்திருக்கிறேன். எனக்கு எதை கண்டும் பயம் இல்லை. கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்றெல்லாம் பேசினார்.
ஆனால், திராவிட மாடலை அவர் கிண்டல் செய்ததால், அவரது பேச்சுக்கு கண்டனங்களும் வலுத்திருக்கின்றன. இந்நிலையில், மாநாட்டில் விஜய் பேசியது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ராதிகா,
“விஜய் தனியாக கட்சி ஆரம்பித்திருப்பதற்கு என்னுடைய மனதார வாழ்த்துகள். அனைவருமே மக்களுக்கு நன்மை செய்யவே அரசியலுக்கு வருகிறார்கள். அதை அவர்களுடைய கொள்கைகளுக்கேற்ப செய்வார்கள்.
தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நட்சத்திரமாக திகழ்ந்துவரும் அவர் அரசியலுக்கு வந்தது மிகச்சிறந்த முடிவுதான். அவரின் அந்த முடிவு எனக்கு பெரும் ஆச்சரியத்தை கொடுத்தது.
சிறு வயதிலிருந்தே எனக்கு விஜய்யை நன்றாக தெரியும். அவருடைய தந்தையின் இயக்கத்தில் நான் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். அதனால், அவரது இந்த முடிவு எனக்கு மகிழ்ச்சி. விஜய் யோசித்துதான் பேசுவார். அப்படித்தான் திமுகவை நேரடியாக எதிர்த்திருக்கிறார்.
அதேசமயம், பாஜகவை எதிர்த்து பேசுவதற்கு முன்பு கட்டாயம் அவர் யோசித்துதான் பேசுவார். அதிமுகவை பற்றி ஏன் அவர் பேசவில்லை என்பது தெரியவில்லை. அரசியலை அவர் வேறு விதமாக பார்க்கிறார். ‘தெறி’ படத்தில் அவருடன் இணைந்து நடித்திருக்கிறேன். அவர் பொதுவெளியில் பெரிதாக பேசமாட்டார்.
ஆனால், மாநாட்டு மேடையில் அவர் ஆக்ரோஷமாக பேசியதை பார்த்து விஜய் வேறு மாதிரி தெரிந்தார்’ என்றார்.
சித்தி சொன்னா சரியாகத்தானே இருக்கும்.?