திரைத்துறையில் 22 ஆண்டுகள் நிறைவு: நயன்தாரா நெகிழ்ச்சி..
தமிழ் சினிமாவில் திருமணத்திற்கு பிறகும் முன்னணி நடிகையாக முத்திரை பதித்து வருபவர் நயன்தாரா என்பது தெரிந்ததே.
மலையாள இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் 2003-ம் ஆண்டு வெளியான ‘மனசினக்கரே’ என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானார், நயன்தாரா. சரத்குமார் நடித்த ‘ஐயா’ படம் மூலம் தமிழுக்கு வந்த அவர், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சினிமாவில் 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதைத் தனது வலைதளத்தில் தெரிவித்துள்ள அவர், அதற்காகப் பதிவு ஒன்றையும் வெளியிட்டு உள்ளார். அதில்,
’22 ஆண்டுக்கு முன் கேமராவுக்கு முன்னால் முதன்முதலில் நின்ற போது, திரைப்படங்கள்தான் என் வாழ்க்கையின் காதலாக மாறும் என்று தெரியாது. ஒவ்வொரு ஃபிரேமும், ஒவ்வொரு ஷாட்டும், ஒவ்வொரு மவுனமும் என்னை வடிவமைத்தது; என்னைக் குணப்படுத்தியது, என்னை நானாக மாற்றியது. அதற்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்’ என நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, திரிஷா தனது திரைப்பயணத்தின் 25 ஆண்டுகள் நிறைவை கொண்டாடியது நினைவுகூரத்தக்கது.

