Pushpa 2

இன்று தவெக நிர்வாகிகள் கூட்டம்: தளபதி விஜய் பரபரப்பு பேச்சு

எண்ணித் துணிக கருமம் என்பது போல, தமிழகத்தில் அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், மிகப்பெரிய அளவில் மாநாட்டை நடத்தி முடித்தார்.

இதனையடுத்து இன்று காலை சென்னையில் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் கொள்கைகள் மற்றும் கொள்கை தலைவர்களை உறுதியாக பின்பற்ற வேண்டும்.

அடுத்ததாக மாநாட்டை மாபெரும் வெற்றி பெற வைத்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுக்கு பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்று அறிவிப்பு ஜனநாயகத்திற்கு எதிராக நடவடிக்கையாகும். மக்களாட்சி தத்துவத்திற்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் அச்சுறுத்தலாக உள்ள பாஜக அரசின் இந்த சட்டத்தை இந்த செயற்குழு கண்டிப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை ஈடுபடுவோருக்கு தண்டனை வழங்கும் தற்போதைய சட்டத்தை வலுவாக்கி குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கிடும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடத்த வேண்டும் எனவும் உடனடியாக சாதி வரி கணக்கெடுப்புக்கு அச்சாரமிடும் வகையில் ஆய்வைக் காலதாமதம் இன்றி உடனே நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

எங்களின் கொள்கைப்படி மருத்துவம் போலவே கல்வியும் மாநிலப் பட்டியலுக்கு உரிமையானது. நீட் தேர்வு ரத்து செய்ய தடையாக இருக்கும் ஒன்றிய அரசின் செயல்பாடுகளையும், இந்த விஷயத்தில் பொய் வாக்குறுதி அளித்து தமிழக மக்களை ஏமாற்றி வரும் திமுக அரசையும் எதிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரந்தூரில் விமான நிலைய அமைக்கும் முடிவை கைவிட வேண்டும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

கோவை மெட்ரோ ரயில் திட்ட பணியில் விரைந்து தொடங்க வேண்டும். ஈழத்தமிழர் மற்றும் தமிழக மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் இரு மொழிக் கொள்கைக்கு எதிராக மூன்றாவது மொழிக் கொள்கை திணிக்க முயலும் மத்திய அரசின் கனவு என்பது மொழிப்போர் தியாகிகள் வாழ்ந்த மண்ணில் எக்காலத்திலும் நிறைவேறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டண உயர்வு, பால் கட்டணம் உயர்வு, சொத்து மக்களின் வரி உயர்வுக்கு திமுக அரசுக்கு கண்டனம், மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத மின் கட்டணத்தை திணித்துள்ள திமுக அரசு, இரு மதத்திற்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்யும் முறையை கைவிட்டு மாதந்தோறும் மின் கணக்கீடு நடைமுறைப்படுத்த வேண்டும். சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும்.

விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில், புதிதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு, பேருந்து நிலையங்கள், பூங்காக்களுக்கு சுதந்திர போராட்ட தியாகிகள்,மொழிப்போர் தியாகிகள் பெயர்களை சூட்ட வேண்டும். காயிதே மில்லத் பெயரில் அரசு விருது வழங்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட வக்ப் சட்ட திருத்த மசோதா இஸ்லாமியர்களின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது.

எனவே, இந்த சட்ட திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் தகைசால் தமிழை விருது வழங்கும் தமிழக அரசுக்கு பாராட்டு தமிழக வெற்றிக்கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய தவெக தலைவர் விஜய், ‘புதிய உறுப்பினர்களை இணைக்க வேண்டும், தேவையற்ற சர்ச்சைகளில் சிக்க வேண்டாம், யார் விமர்சனம் செய்தாலும் தவறான வகையில் விமர்சனம் செய்ய வேண்டாம், மாநாட்டை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் எனவும் கூறினார். தனிநபர் விமர்சனத்தை தவிர்த்து விட்டு ஆதாரங்களுடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட வேண்டும், பூத் கமிட்டியில் அதிக பெண்களை இடம்பெறச் செய்ய வேண்டும், கொடி ஏற்றுவது, பொதுக் கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்டவற்றிற்கு அனுமதி கிடைக்காவிட்டால், கட்சி தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டத்தில் விஜய் பேசிய பேச்சு, இணையத்தில் ரசிகர்களாலும் தொண்டர்களாலும் பகிரப்பட்டு வருகிறது.