நடிகர் யோகிபாபு, கார் விபத்தில் சிக்கினாரா?: நடந்தது என்ன?
யோகிபாபு விபத்துக்கு உள்ளானாரா? என்பது குறித்து உதயா தெளிவுபடுத்தி உள்ளார். இது பற்றிக் காண்போம்..
நடிகர் யோகிபாபு சென்ற கார், விபத்தில் சிக்கியதாக இன்று காலை செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த விபத்தில் யோகிபாபுவுக்கு எந்தவித காயமுமின்றி அவர் தப்பியதாக கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில், யோகிபாபு சென்ற கார் விபத்தில் சிக்கவில்லை எனக்கூறி அவருடன் ‘அக்யூஸ்ட்’ படத்தில் நடித்து வரும் நடிகர் உதயா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், யோகிபாபுவும், தானும் ஏற்காடில் நடைபெற்ற அக்யூஸ்ட் பட ஷூட்டிங்கில் கலந்துகொண்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது, எங்கள் உதவியாளர்கள் சிலர் மற்றொரு காரில் வந்தனர். அவர்கள் வந்த கார் தான் வாலாஜாபேட்டை அருகே வந்தபோது டயர் பஞ்சர் ஆகி டிவைடரில் மோதி விபத்துக்கு உள்ளானது. யோகி பாபு விபத்துக்குள்ளான காரில் பயணம் செய்யவில்லை. அவர் நலமாக இருக்கிறார் என உதயா தெரிவித்துள்ளார்.
யோகிபாபு, உதயா நடிப்பில் உருவாகி வரும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தை பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்கி வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு புழல் மத்திய சிறையில் உரிய அனுமதி வாங்கி ‘அக்யூஸ்ட்’ படத்தின் சில முக்கிய காட்சிகளை படமாக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.