விஜய்யை தொடர்ந்து அஜித்தும் அரசியலுக்கு வருகிறாரா?: நடிகர் ரமேஷ் கண்ணா கருத்து..
‘தல’ அஜித்தும் அரசியலில் குதிக்கிறாரா? என்பது குறித்து, நடிகர் ரமேஷ் கண்ணா தெரிவித்த கருத்து வருமாறு:
அன்று.. இயக்குனர் சரண் இயக்கத்தில், அஜித் நடித்த ‘அசல்’ பட சமயத்தில்; அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்கு.. ‘பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா’ என்ற பெயரில் நிகழ்ச்சியை திரைத்துறையினர் நடத்தினார்கள்.
அதில், அஜித் கலந்துகொள்ள விரும்பவில்லை. இருந்தாலும் அவர் வற்புறுத்தப்பட்டார். அஜித்தும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருணாநிதியை புகழ்ந்து பேசினார்.
பிறகு அவர், ‘நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத்தான் வேண்டுமென்று மிரட்டுகிறார்கள்’ என கருணாநிதியிடமே ஓபனாக முறையிட்டார். மேலும், நடிகர்களை நடிகர்களாக மட்டும் இருக்க விடுங்கள் என்று சட்டென கூறினார். இந்தச் சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, அசல் படத்துக்கும் அப்போதைய ஆளுங்கட்சியால் குடைச்சல் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
அதேபோல், அரசியல் தொடர்பான கருத்துக்களை பொதுவெளியில் தெரிவிப்பதையும் நிறுத்திக்கொண்டு ‘தான் உண்டு தனது வேலை உண்டு’ என இருக்கிறார். தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனியும், குட் பேட் அக்லியை ஆதிக் ரவிச்சந்திரனும் இயக்கி வருகிறார்கள். இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் இருக்கிறது.
இதற்கிடையே, அஜித் எப்போதுமே அதிமுகவின் ஆதரவாளர் என்ற பிம்பமும் உண்டு. ஆனால், அப்படியெல்லாம் எதுவுமில்லை, அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்’ என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுவர்.
இந்நிலையில் தளபதி விஜய், ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். 2026-ம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி போட்டியிடுகிறது. இதனையடுத்து அஜித்தும் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்களில் சிலர் குரல் எழுப்புகின்றனர்.
இச்சூழலில், இந்த விவகாரம் குறித்து, ரமேஷ் கண்ணா சொல்லியிருக்கும் தகவல் டிரெண்டாகியுள்ளது. ‘அரசியலுக்கு விஜய் வந்தது மகிழ்ச்சிதான். ஷூட்டிங் ஸ்பாட்டிலோ அவர் அரசியல் குறித்து பெரிதாக பேசி நான் பார்த்ததில்லை. அதேபோல் தான் அஜித்தும்.
அவரிடம் சென்று விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார். நீங்கள் எப்போது அரசியலுக்கு வருவீர்கள்? என கேட்டோம் என்றால், ‘அமைதியாக இருக்குமாறு சொல்லிவிட்டு சென்று விடுவார்’ என கூறினார்.
ஆக, அரசியல் வேண்டாம், அமைதியாய் இருப்போம். சினிமா-ரேஸ் போதும். அதில், அமர்க்களப்படுத்துவோம் என்பதே ‘தல’ அஜித் எடுத்துள்ள தீர்க்கமான முடிவென தெளிவோம்.!