மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தினருக்கு கலைப்புலி எஸ்.தாணு, அர்ஜுன் மரியாதை: வைரலாகும் நிகழ்வு..
வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தினருக்கு, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் அர்ஜூன் ஆகியோர் மரியாதை செலுத்திய நெகிழ்ச்சியான நிகழ்வு வைரலாகி வருகிறது. அது குறித்த விவரம் பார்ப்போம்..
ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் 1994ஆம் ஆண்டு வெளியான படம் ஜெய்ஹிந்த். இப்படத்தில் இடம் பெற்ற ‘தாயின் மணிக்கொடி’ என்ற பாடல் தேசப்பற்றை ஊட்டியது எனலாம். தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
இந்நிலையில், படத்தின் புரோமோசன் நிகழ்ச்சியில், வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் தாயாரை நேரில் அழைத்து, ஜெய்ஹிந்த் 2 படக்குழு மரியாதை செலுத்தியுள்ளனர்.
மேஜர் முகுந்த் வரதராஜன், சென்னையைச் சேர்ந்தவர். இவர் கடந்த 20014ஆம் ஆண்டு தீவிரவாதிகளுக்கு இடையிலான துப்பாக்கிச் சண்டையின்போது, வீர மரணம் அடைந்தார்.
இவரது வாழ்க்கை வரலாற்றினை மையமாகக் கொண்டு ‘அமரன்’ படம் உருவாகி தீபாவளிக்கு வெளியானது. இந்தப் படத்தினை சோனி பிக்சர்ஸ் மற்றும் உலக நாயகனின் ராஜ் கமல் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார்.
படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றிப் படமாக மாறியுள்ளது. படத்தில், சாய் பல்லவியின் நடிப்பு பலரது பாராட்டுகளுக்கு உரியதாக மாறியுள்ளது.
படம் பார்த்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் படக்குழுவினரைப் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், ஜெய்ஹிந்த் 2 படக்குழுவின்.. ‘வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் தாயாரை நேரில் அழைத்து வந்து மரியாதை செய்துள்ளனர்.
இது தொடர்பாக நடிகர் அர்ஜுன் பேசும்போது, ‘என்னைப் போன்று பல நடிகர்கள், கதாநாயகர்கள் வருவார்கள் போவார்கள். ஆனால், உங்கள் மகனைப்போல் நாயகன் மிகவும் அரிது, உங்களுக்கு எங்களின் சல்யூட்” எனக் கூறினார்.
மேஜர் முகுந்த் வரதராஜனின் தாயார் கீதா வரதராஜன், தந்தை வரதராஜன் , மனைவி இந்து ரெபேக்கா வர்ஹீஸ் மற்றும் மகள் அர்ஷயா ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு ஜெய்ஹிந்த் 2 படக்குழுவினர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும் ‘சிறைச்சாலை’ என்ற தேசப்பற்று மிக்க திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் மகள் அர்ஷயாவுக்கு சால்வை அணிவிக்கும்போது, அங்கிருந்த அனைவரும் கலங்கிவிட்டனர்.
அனைத்து நெஞ்சங்களும் நெகிழ்ந்த இந்நிகழ்வு எட்டுத்திக்கும் வைரலாகி வருகிறது.