A gift of Rs 5 lakhs for creating a child rescue device
A gift of Rs 5 lakhs for creating a child rescue device

சென்னை : ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க உதவும், நவீன கருவியை உருவாக்கினால் ரூ.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்- ஐ மீட்க, சுமார் 80 மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இறுதியில் தோல்வியில் முடிந்தது. சிறுவன் சுர்ஜித் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து குழந்தையின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் பொதுமக்களின் அஞ்சலிக்காக திருச்சி பாத்திமாபுதூர் பகுதியில் உள்ள கல்லறையில் குழந்தை சுர்ஜித் உடல் வைக்கப்பட்டு, குழந்தையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் குழந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அங்கு கூடி உள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தைப் பொறுத்தவரை ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுவது தொடர்கதையாகி வருகிறது. எனவே இது போன்ற சம்பவங்கள் இனி ஏற்படாமல் தடுக்க பயன்படாத ஆழ்துளை கிணறுகளை மூடவேண்டும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க உதவும், நவீன கருவியை உருவாக்கினால் ரூ.5 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக தகவல் தொழில்நுட்ப துறை முதன்மை செயலாளர் சந்தோஷ் பாபு முகநூலில் தகவல் அளித்துள்ளார்.