மகள் ஐஸ்வர்யா குறித்து அவதூறு கருத்துகள்… வதந்திகளுக்கு பதிலளித்து நடிகர் அர்ஜுன் அறிக்கை

நடிகர் அர்ஜுன் சர்ஜாவின் இளைய மகள் அஞ்சனாவின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில், திருமணத்தைத் தொடர்ந்து அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு யூகங்களும், சர்ச்சைக்குரிய கருத்துகளும் பரவி வந்தன.
குறிப்பாக, ஐஸ்வர்யா அர்ஜுனின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பழக்கவழக்கங்கள் குறித்து ஆதாரமற்ற தகவல்கள் பரப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் அர்ஜுன் சர்ஜா தற்போது விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், தனது இளைய மகள் அஞ்சனாவின் திருமணத்திற்கு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள அர்ஜுன், மூத்த மகள் ஐஸ்வர்யாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுந்த விவாதங்களுக்கு இதுவரை திட்டமிட்டே பதிலளிக்காமல் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும், தனக்குப் பிடித்தபடி வாழும் சுதந்திரமும் உள்ளது என்றும், ஐஸ்வர்யா விரும்பினால் சரியான நேரத்தில் தனது தரப்பு விளக்கத்தை அவரே தெரிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு தந்தையாகத் தனது மகளின் குணத்தையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் குறிவைத்து ஆதாரமற்ற மற்றும் இழிவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது எனக் கூறியுள்ளார்.
பொதுவாழ்க்கையில் இருக்கும் நடிகர்களைப் பற்றி விமர்சனங்களும் யூகங்களும் வருவது இயல்புதான் என்றாலும், அடிப்படை ஆதாரமின்றி ஒருவரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தகவல்களைப் பரப்புவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், குறிப்பாகத் தனது மகளை மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானவர் என ஆதாரமின்றி முத்திரை குத்துவது பொறுப்பற்ற செயல் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற செயல்களுக்கு தங்களது மௌனத்தைச் சம்மதமாகக் கருதக்கூடாது என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையான புகார் அளித்து உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராயாமல் பரபரப்புக்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் தனிப்பட்ட தாக்குதல்களையும் சில ஊடகங்கள் பெரிதுபடுத்துவது வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனது மகளின் கண்ணியத்தையும், சுதந்திரத்தையும், சுயமரியாதையுடன் வாழும் உரிமையையும் பாதுகாக்கத் தொடர்ந்து துணை நிற்பேன் எனத் தெரிவித்துள்ள அர்ஜுன், இனிவரும் காலங்களில் இதுபோன்ற அவதூறுகள் தொடர்ந்து பரப்பப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
“மரியாதையும் கண்ணியமும் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளக்கூடியவை அல்ல” எனத் தனது அறிக்கையில் உறுதியாகத் தெரிவித்துள்ளார் நடிகர் அர்ஜுன் சர்ஜா.
View this post on Instagram