விமல் – சிம்புதேவன் கூட்டணியில் உருவாகும் ‘நவோரியா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Web Ads

தமிழ் சினிமாவில் தனித்துவமான கற்பனை உலகங்களையும், நகைச்சுவை கலந்த கதைக்களங்களையும் படைத்து வரும் இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில், நடிகர் விமல் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘நவோரியா’. டி.பி.சி (TPC) ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் சார்பில் திருக்குமரன் கதிர்வேல் இப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார். சிம்புதேவன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இப்படத்தின் தயாரிப்பில் இணைந்துள்ளது. காமெடி, ஆக்‌ஷன், ஃபேண்டஸி என மூன்று அம்சங்களும் கலந்த முழுநீளப் பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

‘23-ம் புலிகேசி’, ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’, ‘புலி’, ‘கசடதபற’, ‘போட்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சிம்புதேவனின் இயக்கத்தில் உருவாகும் 9-வது திரைப்படம் இது.

இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக ஆன் ஷீத்தல் நடித்துள்ளார். மேலும், ஆரி அர்ஜுனன், தம்பி ராமையா, பால சரவணன், நிழல்கள் ரவி, பாலாஜி சக்திவேல், மன்சூர் அலிகான், கஸ்தூரி, அப்புக்குட்டி உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

60 நாட்களுக்கும் மேலாகத் திருநெல்வேலி, கோவில்பட்டி, தென்காசி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதனுடன், படத்தின் முக்கியமான காட்சிகளுக்காகச் சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டு, சுமார் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

Web Ad 2

அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள ‘நவோரியா’, விமலின் திரைப்பயணத்திலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகும் திரைப்படமாகும். இப்படம் தனது திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்ற நம்பிக்கையில் விமல் உள்ளார்.

இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க, எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பையும், சக்தீ வெங்கட்ராஜ் எம் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் கலகலப்பான பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘நவோரியா’ உருவாகியுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.