சீன் திரை விமர்சனம்

மலையாளத்தில் ‘ரோமாஞ்சம்’, ‘ஆவேஷம்’ என அடுத்தடுத்து வித்தியாசமான கதைக்களங்களைக் கொடுத்து கவனம் ஈர்த்தவர் இயக்குநர் ஜித்து மாதவன். தனக்கே உரிய கதை சொல்லும் பாணி, வித்தியாசமான கதாபாத்திரங்கள், எதிர்பாராத திருப்பங்கள், டார்க் ஹியூமர் எனப் பல அம்சங்களால் ரசிகர்களிடம் தனி இடத்தைப் பிடித்தவர். அந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் அவரது புதிய திரைப்படம்தான் ‘சீன்’. சூர்யா, நஸ்ரியா, நஸ்லென் , ஆனந்தராஜ், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம்.
திறமையான காவல்துறை அதிகாரியான இன்பராஜ் (சூர்யா), தனது பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெறத் திட்டமிடுகிறார். சக அதிகாரிகளுக்குத் தலைவலியாக இருக்கும் அவரது விசித்திரமான நடவடிக்கைகளும் அணுகுமுறையும் அவரைச் சுற்றியிருப்பவர்களுக்கு எப்போதும் ஒரு புதிராகவே இருக்கின்றன. இந்தச் சூழலில், ஏற்கெனவே முடித்து வைக்கப்பட்டதாகக் கருதப்பட்ட கொலை வழக்கின் பின்னணியில் மீண்டும் அதே பாணியிலான கொலைகள் நிகழத் தொடங்குகின்றன. இதனால் விசாரணை மீண்டும் சூடுபிடிக்கிறது. ஒருபுறம் ஓய்வு பெறத் துடிக்கும் இன்பராஜ், மறுபுறம் தொடர்ச்சியான கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் மர்ம நபர் ஈஸ்வரன் (நஸ்லென்). இவர்களுக்கு இடையே தொடங்கும் மோதல்தான் கதை.
சூர்யாவைப் பொறுத்தவரை, வழக்கமான ஆக்ஷன் ஹீரோ பிம்பத்திலிருந்து விலகி மிகவும் இயல்பான, குறும்புத்தனமான, அலட்சியமான காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார்.
கதாநாயகன் என்றால் அறிமுகக் காட்சி, பஞ்ச் வசனம், அதிரடியான சண்டை என எதிர்பார்க்கப்படும் வழக்கமான அம்சங்களைத் தவிர்த்து, கதாபாத்திரத்தின் இயல்புக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குநர். சூர்யாவின் உடல்மொழி, வசன உச்சரிப்பு, நகைச்சுவை உணர்வு என அனைத்தும் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக அமைந்திருக்கின்றன. குறிப்பாக, தன்னைச் சுற்றியிருப்பவர்களிடம் அவர் நடந்துகொள்ளும் விதமும், சில இடங்களில் வெளிப்படுத்தும் நகைச்சுவையும் ரசிக்க வைக்கின்றன.
நஸ்ரியாவின் மாயா கதாபாத்திரமும் படத்துக்கு முக்கியமான பலம். புத்திசாலித்தனம், தற்காப்புக் கலைத் திறன், தனக்கே உரிய அணுகுமுறை என வித்தியாசமான கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். சூர்யாவுடன் அவர் இணைந்து வரும் காட்சிகள் இயல்பான நகைச்சுவையையும் சுவாரஸ்யத்தையும் உருவாக்குகின்றன. அவருக்கான சண்டைக் காட்சிகளும் கவனிக்க வைக்கின்றன.

நஸ்லெனைப் பொறுத்தவரை, ஈஸ்வரன் கதாபாத்திரம் முற்றிலும் வேறொரு பரிமாணம். சாதாரணமாகப் பழகும் இளைஞனின் தோற்றத்துக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் கொடூரமான மனநிலையை மிக இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். கொலைகளைச் செய்வதிலும், அவற்றை அணுகுவதிலும் எந்தவிதமான பதற்றமோ குற்ற உணர்ச்சியோ இல்லாத கதாபாத்திரத்தைத் தனது நடிப்பால் நம்ப வைக்கிறார். வில்லன் என்றாலே கோபம், ஆவேசம், மிரட்டல் என வழக்கமான பாணியைத் தவிர்த்து மிகவும் கூலாக நடித்திருப்பது சிறப்பு.
ஜித்து மாதவனின் முந்தைய படங்களைப் போலவே, இங்கும் கதாபாத்திரங்களின் வினோதமான குணாதிசயங்களே நகைச்சுவைக்கான முக்கியக் கருவியாக இருக்கின்றன. நாயகனின் குடும்பத்தினர், காவல்துறை அதிகாரிகள், கொலையாளியைச் சுற்றியிருப்பவர்கள் என ஒவ்வொருவருக்கும் தனித்துவமான குணாதிசயங்களை உருவாக்கியிருக்கிறார். ஒரு சீரியஸான கொலை விசாரணைக்குள் நகைச்சுவையைப் புகுத்துவது சாதாரணமான விஷயமல்ல. ஆனால், கொலைகாரனின் காட்சிகளில்கூட நகைச்சுவையை உருவாக்கியிருப்பது இயக்குநரின் தனித்துவம். குறிப்பாக, இன்பராஜுக்கும் ஈஸ்வரனுக்கும் இடையே நடைபெறும் மோதல்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன.
அதேநேரத்தில், முதல் பாதி பெரும்பாலும் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவதிலும் அவர்களின் பின்னணியை விவரிப்பதிலும் செலவிடப்படுகிறது. இதனால் முக்கியமான கொலை வழக்கின் விசாரணை சற்று தாமதமாகவே முன்னேறுகிறது. சில நகைச்சுவைக் காட்சிகள் சிரிக்க வைத்தாலும், சில இடங்களில் அவை கதையின் வேகத்தைக் குறைக்கின்றன. நாயகனுக்கும் வில்லனுக்கும் இடையே உருவாக்கப்படும் அறிவுப்பூர்வமான மோதல் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம் என்ற எண்ணமும் ஏற்படுகிறது.
ஒளிப்பதிவு படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை ஓட்டத்துக்கு உறுதுணையாக இருக்கிறது. காட்சிகளின் வேகத்தையும் கதாபாத்திரங்களின் நகர்வுகளையும் அழகாகப் பதிவு செய்திருக்கிறார்கள். படத்தொகுப்பு முதல் பாதியில் விறுவிறுப்பைக் கூட்டினாலும், இரண்டாம் பாதியில் சில இடங்களில் தொய்வு ஏற்படுகிறது. சுஷின் ஷியாமின் இசையும் பின்னணி இசையும் படத்தின் நகைச்சுவை மற்றும் பரபரப்பான காட்சிகளுக்கு வலுசேர்க்கின்றன.
ஜித்து மாதவன் மீண்டும் ஒருமுறை தனது வழக்கமான கதை சொல்லும் பாணியைத் தொடர்ந்திருக்கிறார். ஒரு சாதாரண கதைக்குள் வித்தியாசமான மனிதர்களையும் அவர்களின் விசித்திரமான நடவடிக்கைகளையும் புகுத்தி, அதையே படத்தின் முக்கியமான பொழுதுபோக்காக மாற்றியிருக்கிறார். ‘ஆவேஷம்’ படத்தில் ஒரு கேங்க்ஸ்டர் கதையை நகைச்சுவை கலந்து அணுகியவர், இங்கே ஒரு கொலை விசாரணைக் கதையை அதே பாணியில் கையாண்டிருக்கிறார். ஆனால், ‘ஆவேஷம்’ படத்தில் இருந்த திரைக்கதையின் கட்டுக்கோப்பும் விறுவிறுப்பும் இதில் சில இடங்களில் குறைவாகவே உணரப்படுகிறது.
மொத்தத்தில், ‘சீன்’ ஒரு வழக்கமான போலீஸ் விசாரணைத் திரைப்படம் அல்ல. பரிச்சயமான கதைக்குள் புதுமையான கதாபாத்திரங்களையும் டார்க் நகைச்சுவையையும் கலந்து கொடுத்திருக்கும் வித்தியாசமான முயற்சி. வழக்கமான மாஸ் திரைப்படங்களைத் தாண்டி வித்தியாசமான அனுபவத்தைத் தேடும் ரசிகர்களுக்கு ‘சீன்’ நிச்சயம் ஒரு சுவாரஸ்யமான தேர்வு!

சீன் திரை விமர்சனம்
அசால்ட் சூர்யாவின் அல்டிமேட் விசாரணை
- Rating