துல்கர் சல்மானின் ‘I Am Game’ – சென்னையில் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா!

துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘I Am Game’ திரைப்படத்தின் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்ற இந்த விழாவில், திரைப்படம் வரும் செப்டம்பர் 3, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், அவரது திரைப்பயணத்தின் 40-வது திரைப்படம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. ஃபேண்டஸி த்ரில்லர் மற்றும் கமர்ஷியல் என்டர்டெய்னர் என உருவாகியுள்ள இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா அளவில் வெளியாகிறது.
“கிரிக்கெட் விளையாடிய அனுபவமே குறைவு!” – கதிர்
விழாவில் பேசிய நடிகர் கதிர், ‘I Am Game’ திரைப்படம் பல சர்ப்ரைஸ் அம்சங்களைக் கொண்ட வித்தியாசமான படமாக இருக்கும் என தெரிவித்தார். டிரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிகளைத் தாண்டி பல ஆச்சரியங்கள் படத்தில் இருப்பதாகவும் கூறினார்.
மேலும், இப்படத்தில் கிரிக்கெட் கேப்டனாக நடித்துள்ள தான், பள்ளிப் பருவத்தில் பேட் கிரிக்கெட் விளையாடியதைத் தவிர வேறு பெரிய அனுபவம் இல்லாதவர் என்றும், படத்திற்காக கிரிக்கெட்டை புதிதாக கற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
துல்கர் சல்மான் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து ரிஸ்க் எடுப்பது ஊக்கமளிப்பதாகவும், செப்டம்பர் 3-ம் தேதி வெளியாகும் படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கதிர் கேட்டுக்கொண்டார்.
“கதை கேட்டவுடனே நடிக்க முடிவு செய்தேன்!” – சம்யுக்தா விஸ்வநாதன்
நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் பேசுகையில், இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் முதன்முறையாக படத்தின் கதையை கூறியபோதே, தனது கதாபாத்திரம் தன்னை வெகுவாக கவர்ந்ததால் உடனடியாக நடிக்க சம்மதித்ததாக தெரிவித்தார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற நீண்ட படப்பிடிப்பு அனுபவம் தனக்கு சிறந்த பயிற்சியாக அமைந்ததாகவும், துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்றும் அவர் கூறினார்.
“துல்கர் மிகச்சிறந்த மனிதர்!” – ஆண்டனி வர்கீஸ்

நடிகர் ஆண்டனி வர்கீஸ், சென்னையில் நடைபெறும் தனது முதல் திரைப்பட நிகழ்ச்சி இது என்றும், தமிழ் ரசிகர்கள் தன்னை எவ்வாறு வரவேற்பார்கள் என்பதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
துல்கர் சல்மான் சிறந்த தயாரிப்பாளர், நடிகர் மட்டுமல்லாமல் மிகச்சிறந்த மனிதர் மற்றும் தனது நெருங்கிய நண்பர் என்றும் அவர் குறிப்பிட்டார். இயக்குநர் நஹாஸ் ஹிதாயத்துடனான நட்பு மற்றும் படப்பிடிப்பு அனுபவங்களையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
“இது கிட்டத்தட்ட ஒரு தமிழ் படம் போல இருக்கும்!” – துல்கர் சல்மான்
விழாவில் பேசிய துல்கர் சல்மான், ‘I Am Game’ திரைப்படம் ரசிகர்களுக்கு கிட்டத்தட்ட ஒரு தமிழ் படம் போன்ற உணர்வை ஏற்படுத்தும் என தெரிவித்தார். இதில் ஏராளமான தமிழ் நடிகர்கள் நடித்திருப்பதாகவும், தனது தயாரிப்பு நிறுவனத்தில் உருவான மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் பிரம்மாண்டமான தயாரிப்பு இதுதான் என்றும் கூறினார்.
கதிரின் இயல்பான நடிப்பு, மிஷ்கினின் எனர்ஜி, சம்யுக்தா விஸ்வநாதனின் பங்களிப்பு மற்றும் ஆண்டனி வர்கீஸின் நடிப்பு ஆகியவற்றை துல்கர் பாராட்டினார். மேலும், ஜேக்ஸ் பிஜாயின் இசையில் படம் அசத்தலான ஆல்பமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
காமெடி, ரொமான்ஸ், மர்மம், சஸ்பென்ஸ், ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் கேமிங் என பல்வேறு அம்சங்களுடன் ‘I Am Game’ முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகியுள்ளதாகவும் துல்கர் கூறினார்.
சஜீர் பாபா, இஸ்மாயில் அபு பக்கர், பிலால் மொய்து ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். அன்பறிவ் மாஸ்டர்ஸ் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.
ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், காயாது லோஹர், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏற்கனவே வெளியான டிரெய்லர் மற்றும் முதல் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற முன் வெளியீட்டு விழா படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
‘I Am Game’ செப்டம்பர் 3, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
