நடிகர் ராஜு இயக்கத்தில் ஹெச்.வினோத் தயாரிக்கும் `ஆல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஹெச். வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘அல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படம்!
தரமான கதைகளுக்கும் வித்தியாசமான படைப்புகளுக்கும் முக்கியத்துவம் அளித்து வரும் Passion Studios நிறுவனம், ஹெச். வினோத்-ன் Aspire Ubuntu Films நிறுவனத்துடன் இணைந்து புதிய திரைப்படமான ‘அல்மோஸ்ட் நல்லவன்’ படத்தை தயாரிக்கிறது.
ராஜு ஜெயமோகன் எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
டார்க் காமெடி, ஆழமான உணர்வுகள், குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் கிராமத்து வாழ்க்கையின் இயல்பான மண்வாசனை ஆகியவற்றை இணைத்து உருவாகும் இப்படம், வித்தியாசமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி வருகிறது.
‘அல்மோஸ்ட்’ என்ற வார்த்தைக்கு சந்தேகம், முழுமையின்மை, தெளிவின்மை போன்ற பல அர்த்தங்கள் உள்ள நிலையில், அதுவே இப்படத்தின் கதையின் முக்கிய அம்சமாக இடம்பெறுகிறது.
இந்நிலையில், ‘அல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படத்தின் தொடக்க விழா ஜூலை 6-ஆம் தேதி காலை பூஜையுடன் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் திரையுலகைச் சேர்ந்த பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
படம் குறித்து தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறுகையில், புதிய கதைகளை சொல்ல விரும்பும் திறமையாளர்களுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், நம் மண்ணின் கலாச்சாரத்தையும் வாழ்க்கை முறையையும் பிரதிபலிக்கும் இயல்பான நகைச்சுவையுடன் இப்படம் உருவாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஹெச். வினோத் பேசுகையில், நல்ல கதைகளுக்கு ரசிகர்கள் எப்போதும் ஆதரவு அளித்து வருவதாகவும், புதிய திறமையாளர்களையும் தரமான படைப்புகளையும் அறிமுகப்படுத்தும் நோக்கில் தயாரிப்பாளராக பயணித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் மற்றும் நடிகர் ராஜு ஜெயமோகன் கூறியதாவது, “ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நல்ல குணங்களும் குறைகளும் இருக்கும். இன்றைய டிஜிட்டல் உலகில் மனிதர்கள் தங்களுக்கென ஒரு மெய்நிகர் முகத்தை உருவாக்கிக் கொள்கின்றனர். அப்படிப்பட்ட ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களே இப்படத்தின் கதை” என தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் துஷாரா விஜயன், இமான் அண்ணாச்சி, பிக்பாஸ் புகழ் தாமரை செல்வி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஃபாக்ஸன் இசையமைக்கும் இப்படத்திற்கு டி.எஸ். பிரசன்னா ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை கோவிந்த் கவனிக்கிறார். கலை இயக்குநராக பாலா ஜெயபிரதா பணியாற்றுகிறார். சண்டைக் காட்சிகளை ஓம் அமைத்துள்ளார்.
வலுவான கதைக்களம், திறமையான தொழில்நுட்பக் குழு மற்றும் புதுமையான திரைக்கதையுடன் உருவாகி வரும் ‘அல்மோஸ்ட் நல்லவன்’, ரசிகர்களுக்கு புதிய திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
