‘ஹபீபி’ வெற்றிக்கு நன்றி கூறிய படக்குழு… உணர்வுபூர்வமாக பேசிய கஸ்தூரி ராஜா – மீரா கதிரவன்!

Web Ads

நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஹபீபி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் கலந்து கொண்ட நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் பேசிய பாடலாசிரியர் யுகபாரதி, உதவி இயக்குநராக இருந்த காலத்திலிருந்தே மீரா கதிரவனை அறிந்திருப்பதாகக் கூறினார். பல ஆண்டுகளாக அவர் கனவு கண்ட வெற்றியை ‘ஹபீபி’ மூலம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், தமிழ் சினிமாவில் இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறையை இயல்பாகவும் உண்மையாகவும் பதிவு செய்திருக்கும் முக்கியமான படைப்பாக இது அமைந்துள்ளதாகவும் பாராட்டினார்.

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, எந்த கருத்தையும் வலுக்கட்டாயமாக திணிக்காமல், மனிதர்களின் வாழ்வியலை நேர்மையாக பதிவு செய்திருக்கும் படமாக ‘ஹபீபி’ இருப்பதாகக் கூறினார். வன்முறைகள் அதிகரித்து வரும் காலத்தில் மனிதநேயத்தையும் ஆறுதலையும் பேசும் படைப்பாக இது திகழ்வதாகவும், மக்கள் திரையரங்குகளில் சென்று படத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

எடிட்டர் மதி, கலை இயக்குநர் அப்புன்னி சாஜன், நடிகைகள் அனுஸ்ரேயா ராஜன், மாளவிகா மனோஜ், ஜெயஸ்ரீ, மலர் உள்ளிட்டோர் படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும், வாய்ப்பு வழங்கிய இயக்குநருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்தனர்.

நடிகர் ஈசா, படம் வெளியான பிறகு மக்கள் தன்னை அடையாளம் கண்டு பாராட்டுவது மிகப்பெரிய மகிழ்ச்சி என கூறினார். தங்கள் குடும்பத்தின் ஒருவரைப் போல அன்பு செலுத்தும் ரசிகர்களுக்கும், வாய்ப்பு அளித்த இயக்குநருக்கும் நன்றி தெரிவித்தார்.

சவுண்ட் மிக்ஸிங் கலைஞர் உதயகுமார், படத்தின் ஒலி வடிவமைப்பில் இயக்குநர் மீரா கதிரவனின் பங்களிப்பு மிகப்பெரியது என்றும், இசையமைப்பாளர் சாம் சி.எஸ். வழங்கிய பின்னணி இசை படத்திற்கு பெரிய பலமாக அமைந்ததாகவும் குறிப்பிட்டார்.

நடிகர் சன் சாகுல், இது மண் சார்ந்த கதையை மட்டுமல்ல, இஸ்லாமிய சமூகத்தின் உறவுகள், மகிழ்ச்சி, துயரம் உள்ளிட்ட வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களைப் பதிவு செய்திருக்கும் திரைப்படம் என்றும் பாராட்டினார்.

சித்த மருத்துவர் சிவராமன், இயக்குநர் ராம் மூலமாக இந்தப் படத்தை அறிந்ததாகவும், படம் பார்த்தபின் மனதை ஆழமாகத் தொட்டதாகவும் கூறினார். இஸ்லாமியர்களை தவறான கோணத்தில் சித்தரிக்கும் பல படங்களுக்கு மத்தியில், அவர்களின் உண்மையான வாழ்க்கையை பதிவு செய்திருப்பது பாராட்டத்தக்க முயற்சி என்றார்.

இயக்குநர் தமிழ், தமிழ் சினிமாவில் முழுமையான இஸ்லாமிய வாழ்க்கை முறையை மையமாகக் கொண்ட படைப்புகள் அரிது என்றும், எந்த புனைவுமின்றி இயல்பான வாழ்க்கையை திரையில் பதிவு செய்ததற்காக படக்குழுவை பாராட்டினார்.

இயக்குநர் ராஜூமுருகன், மீரா கதிரவன் பல ஆண்டுகளாக நல்ல சினிமாவுக்கும் வணிக வெற்றிக்கும் இடையே போராடி வந்தவர் என்றும், அந்த முழுமையான வெற்றியை ‘ஹபீபி’ அவருக்கு தேடித்தந்துள்ளதாகவும் கூறினார். தமிழ் இலக்கியத்திலும் அரசியல் வரலாற்றிலும் இஸ்லாமியர்களின் பங்களிப்பு பெரிதாக இருந்தபோதிலும், தமிழ் சினிமாவில் அது பிரதிபலிக்காத குறையை இந்த படம் சரிசெய்துள்ளதாக அவர் தெரிவித்தார். “இஸ்லாமிய சினிமாவின் புதிய தொடக்கமாக ஹபீபி இருக்கும்” என்றும் அவர் பாராட்டினார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, கஸ்தூரி ராஜாவை இயக்குநராக மட்டுமல்ல, நடிகராகவும் இந்தப் படம் புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக கூறினார். சமூக பொறுப்புணர்வுடன் உருவாக்கப்பட்ட இப்படம் அனைவராலும் கொண்டாடப்பட வேண்டிய படைப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.

நடிகை தனஸ்ரீ படக்குழுவினர் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

உணர்ச்சிகரமாக பேசிய கஸ்தூரி ராஜா, இந்தப் படத்தில் சுதந்திரமாக நடிக்க அனுமதித்த தனது மனைவிக்கும், உடன் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்தார். படம் பார்த்த பிறகு தனது குடும்பத்தினர் கண்கலங்கியதாகவும், நடிகர் தனுஷ் கூட தன்னைப் பாராட்டியதாகவும் கூறினார். ‘ஹபீபி’ திரைப்படமும் யூசுப் கதாபாத்திரமும் தனது வாழ்க்கையில் ஒரு புதிய பிறவியைப் போல அமைந்துள்ளதாக அவர் உணர்வுபூர்வமாக பகிர்ந்துகொண்டார்.

தயாரிப்பாளர்கள் கருப்பசாமி மற்றும் இப்ராஹிம் ஆகியோர், படத்தை வெற்றிப்படமாக மாற்றிய ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

இறுதியாக பேசிய இயக்குநர் மீரா கதிரவன், தனது சினிமா பயணத்தில் முதல் முறையாக நன்றி தெரிவிக்கும் விழாவில் பங்கேற்பது மிகுந்த உணர்ச்சியை அளிப்பதாகக் கூறினார். தன்னை ஆதரித்த குடும்பத்தினர், படக்குழுவினர், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர் ராம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த அவர், இஸ்லாமியர்களை பற்றிய தவறான சினிமா பார்வையை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவான படைப்பே ‘ஹபீபி’ என்றும், அந்த முயற்சியில் படம் வெற்றி பெற்றிருப்பது தான் தனது மிகப்பெரிய சாதனை என்றும் தெரிவித்தார்.