உணர்வுகள் பேசும் வெற்றி: யோகி பாபுவின் நெஞ்சார்ந்த நன்றி!

Web Ads

நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், உள்ளடக்கத்தை மையமாகக் கொண்ட கதைகளில் தன்னை நிரூபிக்கும் சிலர் மட்டுமே தமிழ்சினிமாவில் உள்ளனர். அந்த வரிசையில் தனித்துவமான இடத்தை பிடித்திருப்பவர் யோகி பாபு.

பல ஆண்டுகளாக ரசிகர்களை சிரிக்க வைத்த அவர், தற்போது வலுவான கதாபாத்திரங்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அவரது சமீபத்திய படம் “கெணத்த காணோம்” விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டில், வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக, பல படங்களில் பிஸியாக இருந்தபோதிலும், இப்படத்திற்காக அவர் மேற்கொண்ட முழுமையான (360°) ப்ரோமோஷன் ஈடுபாடு குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து யோகி பாபு கூறியதாவது:

“இந்த தருணம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், அதே நேரத்தில் ஒரு வகையான துயரத்தையும் தருகிறது. இயக்குநர் சுரேஷ் சங்கையா அவர்கள் இந்த வெற்றியை நேரில் காண முடியாதது எனக்கு வேதனை. ஆனால், அவரின் கனவும் நோக்கமும் ‘கெணத்த காணோம்’ படத்தின் மூலம் என்றும் உயிருடன் இருக்கும்.

இந்த வாய்ப்பை எனக்கு அளித்ததற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி. இதயம் தொடும் இப்படத்தை உருவாக்கிய முழு படக்குழுவிற்கும் நன்றிகள். பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் அளித்த தொடர்ந்த ஆதரவு, நகைச்சுவையைத் தாண்டி புதிய பாதையில் செல்ல என்னை ஊக்குவித்தது. இந்த வெற்றி, இனியும் அர்த்தமுள்ள படங்களை வழங்க என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது.”