Pushpa 2

இனி, அதிகாலை சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடையாது: அரசு உத்தரவு

தெலுங்கானா சினிமாவில், ‘இனி அதிகாலை சிறப்புக் காட்சி கிடையாது’ என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:

புஷ்பா-2 படம், கடந்த 5-ம் தேதி திரைக்கு வந்தது. முன்னதாக இப்படத்தின் ஸ்பெஷல் காட்சி, கடந்த 4-ம் தேதி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சிக்கப்பள்ளியில் உள்ள சந்தியா தியேட்டரில் நடந்தது. சிறப்புக்காட்சிக்கு அல்லு அர்ஜூன் வந்தார்.

ஏற்கனவே, ஸ்பெஷல் பிரீமியர் காட்சியைப் பார்த்து ரசிக்க ஏராளமான ரசிகர்கள் தியேட்டரில் குழுமியிருந்தனர். அப்போது, அல்லு அர்ஜூனை நேரில் பார்க்க மேற்கொண்டு அதிகமான ரசிகர்கள் தியேட்டருக்குள் வந்தனர். அப்போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசல் காரணமாக ரசிகர்கள் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த பெருங்கூட்டத்தில் சிக்கி மூச்சு திணறிய ரேவதி (39) என்ற பெண் உயிரிழந்தார். அவரது மகன் தேஜா தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்.

இதை தொடர்ந்து, போலீசார் அல்லு அர்ஜூன் மற்றும் அவரது பாதுகாப்புக் குழுவினருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், தெலுங்கானா மாநில அமைச்சர் கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி, ‘இனிமேல் தெலுங்கானா மாநிலத்தில் எந்தப் படத்துக்கும் அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதியில்லை’ என அறிவித்துள்ளார்.

இச்சூழலில், அல்லு அர்ஜுன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் பேசும்போது, ‘ரேவதியின் மரணம் அதிர்ச்சியை தந்துள்ளது. அவரது குடும்பத்தாரின் வலியில் நானும் பங்கேற்கிறேன். அந்த குடும்பத்துக்கு தேவையான உதவிகளை செய்வேன்.

எனது சார்பில் ரூ. 25 லட்சத்தை ரேவதி குடும்பத்துக்கு வழங்குகிறேன். அவர்களின் மருத்துவ செலவுகளையும் நான் ஏற்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

woman dies pushpa 2 special screenings telangana