Pushpa 2

ரஜினிகாந்துடன் இன்று திடீர் சந்திப்பு ஏன்?: சீமான் விளக்கம்..

‘ரஜினிகாந்திடம் நான் பேசியதையெல்லாம் வெளியில் சொல்ல முடியாது’ என கூறிய சீமான்.. மற்றபடி தெரிவித்த தகவல்கள் வருமாறு:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் இன்று திடீரென சந்தித்தார். ரஜினிகாந்தை சந்தித்த பிறகு பேசிய அவர்,

‘நீண்ட நாட்களாக ரஜினிகாந்தை சந்திக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால், அவர் படப்பிடிப்பு என பிஸியாக இருந்ததார். நானும் கட்சிக் கூட்டம் என பிசியாக இருந்தேன். இதனால், சந்திப்பு தாமதமானது. நேற்று சந்திப்பு குறித்து முடிவு செய்யப்பட்டு இன்று சந்தித்தேன். அன்பு மற்றும் மரியாதை நிமித்தமாகவே ரஜினிகாந்தை சந்தித்தேன்.

தமிழக அரசியலில் நல்ல தலைமைக்கான வெற்றிடம் உள்ளது. ரஜினியுடன் நிறைய விஷயங்கள் பேசினேன். அதையெல்லாம் பகிர்ந்து கொள்ள முடியாது.

சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி கூறியது சரிதான். சிஸ்டம் ராங் என்று ரஜினி சொன்னார். அதைத்தான் நான் தவறாக உள்ளது என்று கூறுகிறேன்.

‘அரசியல் என்பது மிக கொடூரமான ஆட்டம்’ என ரஜினிகாந்த் மற்றும் கமலிடம் ஏற்கனவே கூறியுள்ளேன். அரசியல் உங்களுக்கு சரியாக வராது. ஏச்சு பேச்சுக்களை தாங்க வேண்டும் என ரஜினிகாந்திடம் கூறியிருக்கிறேன். ரஜினியுடன் திரைத்துறை, அரசியல் என பல விஷயங்களை பேசினேன். ரஜினியை சந்தித்தது அரசியலுக்காக தான். அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை.

சங்கி என்றால் நண்பன் என அர்த்தம். திமுகவை எதிர்த்தாலே சங்கி என்பதா? அப்படியென்றால், சங்கி என்பதில் பெருமைதான்.

பிரதமரை, முதல்வர் துணை முதல்வர் சந்தித்தது பற்றி வெளியே சொல்ல மாட்டார்கள். எங்களை எல்லாம் சங்கி என்று சொல்பவர்கள் தான் உண்மையான சங்கிகள். தற்போது உள்ள தலைவர்கள் உருவானவர்கள் அல்ல, உருவாக்கப்படுகிறார்கள்.

மக்களின் துயரம், பசி என அடித்தளத்தில் இருந்து தலைவர் ஒருவர் மேலே வர வேண்டும். உருவாக்கப்பட்ட தலைவர்களுக்கு அடித்தட்டு மக்களின் கவலை, பசி, கண்ணீர் எதுவும் தெரியாது.

தற்போது, திடீரென்று அரசியல் தலைவராக சிலர் உருவாக்கப்படுகிறார்கள். தற்போதைய அரசியல் களத்தில் காமராஜர், அண்ணா போன்ற தலைவர்கள் இல்லை என சீமான் தெரிவித்தார்.

சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் வெளியேறி வருகின்றனர். நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறும் நிர்வாகிகள் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே, விஜய்யின் அரசியல் கொள்கைகளை சீமான் கடுமையாக எதிர்த்து வருகிறார். ரஜினி ரசிகர்களும் வலைதளங்களில் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். முன்னதாக, நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவுள்ளதாக தெரிவித்தபோது, அவரை கடுமையாக விமர்சித்து வந்தார் சீமான்.

இந்நிலையில் சீமான், திடீரென ரஜினிகாந்தை சந்தித்துப் பேசிய நிகழ்வு, சினிமா துறையிலும் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

why i met actor rajinikanth ntk chief seeman explains
why i met actor rajinikanth ntk chief seeman explains