விஜய்யின் அறிமுகப் பாடல் நாளை வெளியீடு: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..
விஜய்யின் கடைசிப்படமான ‘ஜனநாயகன்’ படத்தின் புதிய போஸ்டர் வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’ படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம் மேனன், ப்ரியாமணி, நரேன், மமிதா பைஜு உள்பட பலர் நடித்துள்ளனர். ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் நெரிசல் சம்பவம் காரணமாக இப்படம் குறித்த அறிவிப்பு எதையும் வெளியிடாமல் இருந்து வந்தது படக்குழு. இந்நிலையில் விஜய் மீண்டும் அரசியல் களத்துக்கு வந்த நிலையில், தற்போது இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.
அதில், விஜய் நடுவில் நிற்க அவரைச் சுற்றி நிற்கும் மக்கள் அனைவரும் அவர் நெஞ்சின் மீது கை வைத்திருக்கின்றனர். இந்த போஸ்டர் தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இப்படத்தின் முதல் பாடல் நாளை 8-ந்தேதி (சனிக்கிழமை) அன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இது படத்தில் விஜய்யின் அறிமுகப் பாடலாக இருக்கலாம் என்றே கூறப்படுகிறது. இப்பாடலை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

