விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா பிப்ரவரியில் திருமணம்?

ஒரே துறையில் இருப்பவர்கள் ஒருவரையொருவர் புரிந்து காதலித்து இல்லற வாழ்வில் இணைவது இயல்புதானே. அதுபோல திரைத்துறையில் தொடரும் ஒரு நிகழ்வு காண்போம்..
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் நிச்சயதார்த்த செய்தி வைரலாக மாறியுள்ளது. நேற்று வெளியான இந்த செய்தி வேகமாகப் பரவியது. ஐதராபாத்தில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்ததாக கூறப்பட்டது.
அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இந்திய நட்சத்திரமாக மாறிய விஜய் தேவரகொண்டா, நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா இருவரும் ‘கீதா கோவிந்தம்’ படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு, பின்னர் காதலாக மலர்ந்தது. அதைத் தொடர்ந்து ‘டியர் காம்ரேட்’ படத்திலும் இருவரும் இணைந்து நடித்தனர். அப்போதிருந்தே அவர்களது காதல் உறவு வலுப்பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இடையேயான காதல் நிலைப்பாடு ஊடகங்களில் பல கேள்விகளை எழுப்பியது. ஆனால், இருவரும் தங்கள் உறவு குறித்து நேரடியாக பதிலளிக்காமல், மறைமுகமாகவே பதிலளித்து வந்தனர்.
சமீப காலமாக, தங்கள் காதலை மறைமுகமாக உறுதிப்படுத்தியதன் மூலம், அவர்களது திருமணம் விரைவில் நடைபெறும் என்பது தெளிவாகியுள்ளது. தசரா பண்டிகையை முன்னிட்டு, ஒரு நல்ல நாளில் விஜய் மற்றும் ராஷ்மிகா நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் இந்த நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்று கூறப்படுகிறது.
மேலும், இவர்களது திருமணம் அடுத்தாண்டு பிப்ரவரியில் நடக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்திகளை இதுவரை இருவரும் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.
