வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில், சிங்கமுத்துவுக்கு அபராதம்
திரையில் சிரிக்க வைத்தவர்கள் இவர்கள்; தற்போது சிந்திக்கவும் வைத்துள்ளார்கள்.
அதாவது, சிங்கமுத்துவுக்கு எதிராக, வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் ஒருதலைபட்சமாக வழங்கப்பட்ட தடை உத்தரவை நீக்கியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், சிங்கமுத்துவுக்கு ரூ.2500 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வடிவேலு தாக்கல் செய்த மனுவில், ‘சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களுக்கு நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில், தன்னைப் பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்டஈடாக வழங்க சிங்கமுத்துவுக்கு உத்தரவிட வேண்டும். தன்னைப் பற்றி அவதூறாக பேச சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கெனவே நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வடிவேலுவுக்கு எதிராக இனிமேல் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன் என நடிகர் சிங்கமுத்து தரப்பில் உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘நடிகர் வடிவேலுவுக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான எந்த தகவல்களையும், வாய்மொழியாகவோ, எழுத்துபூர்வமாகவோ, டிஜிட்டல் முறையிலோ வெளியிடப் போவதில்லை’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதை. பதிவு செய்து கொண்ட நீதிபதி இடைக்கால மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், பிரதான சிவில் வழக்கு விசாரணையில், சிங்கமுத்து தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படாத நிலையில், அவருக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து , சிங்கமுத்து சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘எனக்கு 67 வயதாகி விட்டது. உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தேன்.
இதனால், பிரதான வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய முடியவில்லை. எனவே, ஒருதலைபட்சமாக வழங்கப்பட்ட தடை உத்தரவை நீக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ் பாபு, பிரதான வழக்கில் விதிக்கப்பட்டிருந்த உத்தரவை நீக்கி உத்தரவிட்டார். மேலும், சிங்கமுத்து தரப்புக்கு ரூ.2,500 அபராதம் விதித்து அதை வடிவேலு தரப்புக்கு செலுத்துமாறு உத்தரவிட்டு, பிரதான சிவில் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.