மாமன்னன் திரைப்படம் வெற்றிக்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல விநியோகிஸ்தர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளுடன் வளம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். முன்னணி நடிகராகவும் கலக்கி வரும் இவர் தற்போது அரசியலில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். அதனால் படங்களில் நடிப்பதை தவிர்க்க இருக்கும் இவர் தனது கடைசி படமாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மாமன்னன்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

பகத் பாஸில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி தொடர்ந்து ரசிகர்கள் மத்தியிலும், திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தை வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது நன்றியை தெரிவித்து வெளியிட்டு இருக்கும் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது. அதில் அவர், “மாமன்னன் வெளியாகி இரண்டாவது வாரத்தில் தமிழகத்தில் 465க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், இந்தியாவின் பிற பகுதிகளில் 250 மேலான திரையரங்குகளிலும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மாமன்னன் படத்தை மெகா பிளாக்பஸ்டராக மாற்றியதற்காக பார்வையாளர்களுக்கு நன்றி”. என்று குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார். அதற்கு ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.