
ரயில் விபத்தில் நேர்ந்த அடுத்தடுத்து உயிரிப்பு: இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வேண்டுகோள்..
பொதுமக்கள் உண்மையை ஆராய்ந்து செயல்பட வேண்டும் என ஜி.வி.பிரகாஷ் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு:
உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மும்பை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில், மகாராஷ்டிர மாநிலம் பட்னேரா ரயில் நிலையம் அருகே வந்த போது, பி4 ஏசி பெட்டியின் சக்கரங்களில் தீப்பொறி பறந்தது.
இதை கவனித்த பயணி ஒருவர், ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியதாக கூறப்படுகிறது. சில மணி நிமிடத்திலேயே இந்த செய்தி ரயில் முழுவதும் பரவியது.
இதைத்தொடர்ந்து, ரயிலில் இருந்து மற்ற பயணிகள் அவசர அவசரமாக இறங்கி அருகே இருந்த தண்டவாளத்தில் இறங்கிய நிலையில், எதிர்திசையில் அதிவேகமாக வந்த பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதியது.
இதில், 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, பலியானோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, ரயில்வே போலீசார் மேற்கொண்ட விசாரணையில், புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள பிரேக்-பைண்டிங் காரணமாக தீப்பொறிகள் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் என பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தனது எக்ஸ் தள பக்கத்தில் தனது குமுறலை வெளிப்படுத்தி உள்ளார். அதில், நேற்று லக்னோவ் – டெல்லி இடையேயான ரயிலில் ஒரு பெட்டியில் தீ பரவியதாக யாரோ பரப்பி விட்ட பொய் தகவலை நம்பி, அபாய சங்கிலியால் ரயிலை நிறுத்திவிட்டு இறங்கி தப்பிக்க முயன்ற பயணிகளில் 15-க்கும் மேற்பட்டோர் எதிரில் வந்த பெங்களூரு ரயிலில் அடிபட்ட இறந்த செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
பொய் செய்தியை பரப்பியவர்கள் மீது அரசு தீவிர சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல் உண்மையை ஆராய்ந்து செயல்பட வேண்டுகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.
இதற்கு இணையவாசிகள், ஜிவிபி சமூக சிந்தனை வரவேற்கத்தக்கது. அதே நேரம், ரயில் பயணிகள் இருந்த பதற்ற நிலையில், ஆராய்ச்சி செய்வதென்பது நடைமுறைக்கு ஒவ்வாதது. எதையோ பார்த்து யாரோ ஒருவருக்கு நேர்ந்திருக்கலாம் பதற்றம். அது, மற்றவர்களையும் தொற்றிக் கொண்டதுதான் பரிதாபமாகி விட்டது’ என தெரிவித்துள்ளனர்.
