ஹாட்ரிக் வெற்றி பெற்ற தயாரிப்பாளரின் அடுத்த 2 திரைப்படம்..

தமிழ் சினிமாவில் தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களை கொடுத்துள்ள தயாரிப்பு நிறுவனம் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம். இது குறித்த தகவல்கள் காண்போம்..
‘குட் நைட்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ரி ஆனது மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம். இதன் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன். இவர் தன் தம்பி விநாயக்கிற்காக தொடங்கியது தான் இந்த தயாரிப்பு நிறுவனம்.
அவர் இயக்கிய ‘குட் நைட்’ படத்தை தயாரித்து வெற்றிகண்ட யுவராஜ், அடுத்தடுத்து லவ்வர், டூரிஸ்ட் பேமிலி என இரண்டு தரமான படங்களை கொடுத்து முத்திரை படைத்திருக்கிறார்.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால், குட் நைட் தவிர மற்ற இரண்டு படங்களுமே பெரிய படங்களோடு போட்டி போட்டு ரிலீஸ் ஆகின.
குறிப்பாக லவ்வர் திரைப்படம் 2024-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆனது. ஆனால், அப்படம் லால் சலாமை விட அதிகம் வசூலித்து மாஸ் காட்டியது. அதேபோல், தற்போது சசிகுமார் நடித்துள்ள டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தையும் சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்துக்கு போட்டியாக ரிலீஸ் செய்துள்ளனர்.
‘தில்லுக்கு துட்டு’ தயாரிப்பாளர் என பெயரெடுத்துள்ளார் யுவராஜ். தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றியை ருசித்துள்ள இவர் அடுத்து இரண்டு படங்களை தயாரித்து வருகிறார். அதில் ஒன்று அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
அதேபோல் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் மற்றொரு திரைப்படம் ‘ஹேப்பி எண்டிங்’. இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடிக்கிறார். இப்படமும் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
முன்னதாக, சிறு பட்ஜெட், தரமான கதை என்ற ஃபார்முலாவில் 100-வது படத்தை, தயாரிப்புத் துறையில் நெருங்கியுள்ளது சூப்பர் குட் பிலிம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
