Web Ads

‘சக்தித் திருமகன்’ பட கதை திருட்டு விவகாரம்: இயக்குநர் விளக்கம்..

அருண்பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து, தயாரித்த படம் ‘சக்தித் திருமகன்’. செப்டம்பர் 19-ம் தேதி வெளியான இப்படம் அக்டோபர் 24-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியிலும் வெளியாகிவிட்டது. சமீபத்தில் இப்படத்தினை பார்த்துவிட்டு இயக்குநர் ஷங்கர் பாராட்டியிருந்தார்.

இதனிடையே, இக்கதை தான் எழுதி காப்பிரைட்ஸ் வாங்கி வைத்திருந்த ‘தலைவன்’ என்ற படத்தின் கதை என சுபாஷ் சுந்தர் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பான ஆதாரங்களையும் வெளியிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் ட்ரீம் வாரியர் நிறுவனத்தையும் குறிப்பிட்டிருந்தார். சுபாஷ் சுந்தரின் பதிவு இணையத்தில் வைரலாக பரவியது.

’சக்தித் திருமகன்’ படத்தின் கதை திருட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பலரும் இது குறித்து பேசி வருவதால் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் அருண்பிரபு. அதில்,

‘பல வருட உழைப்பிற்குப் பின் – இது போன்ற அவதூறுகள் மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. முதலில் செய்தியைக் கேட்டது, இது வெறும் இணையக் கிண்டல் விட்டுவிட வேண்டும் என்று தான் தோன்றியது. பல முன்னணி ஊடகங்கள் இதை செய்தியாக்கிய போது, பலர் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டதை ஒட்டியும் இதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று தோன்றுகிறது.

இது 2014 அக்டோபரில் இருந்த எனது மின்னஞ்சல் இணைப்பு. 2014-ல் இருந்தே எழுதப்பட்ட கதை தான் ‘சக்தித் திருமகன்’. ‘பராசக்தி’ என்ற தலைப்பில் கிட்டு என்ற கதாபாத்திரமும், அவன் secretariatல் தரகர் வேலையில் ஈடுபடுபவன் என்பதும், பெரியாரிஸ்ட் சுவரெழுத்து சுப்பையாவின் வளர்ப்பில் வளர்க்கப்பட்ட ஒரு சிறுவன் – மக்களைக் கேள்வி கேட்க தூண்டுகிறார் என்பது, எட்ட முடியாத இடத்தில் இருக்கும் ஒரு பலம் பெற்ற வில்லனும் – அப்போதே எழுதப்பட்டது. கால சூழலுக்கேற்ப அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப – திரைக்கதையை முடித்து பல போராட்டங்களுக்குப் பின் இன்று தான் 2025-ல் அது மக்களிடம் சென்றடைந்திருக்கிறது.

சில நாட்களாகச் சமூக வலைதளங்களில் சக்தித் திருமகன் திருட்டுக் கதை எனவும் அது 2022லேயே எழுதப்பட்ட இன்னொருவரின் கதை என்று யாரோ சொல்லியிருக்கிறார். மேலும் அவர் 2022-ல் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸுக்கும் கொடுத்த கதை சுருக்கத்தை திருடி எழுதப்பட்டதே ‘சக்தித் திருமகன்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இது முற்றிலும் தவறு, சதி.

2014- ஆம் வருடத்திலிருந்து இத்திரைக்கதை தொடர்பாக என்னிடம் எல்லா சாட்சியங்களும் உள்ளன. மின்னஞ்சல் பகிர்வுகள், தயாரிப்பாளர்கள், நடிகர்களுக்கு அனுப்பிய திரைக்கதைப் பகிர்வுகள், பதிவுச் சான்றிதழ்கள், வீடியோ, ஆடியோ பதிவுகள் முதலிய ஆவணங்கள். நான் திரைத்துறையில் இந்தக் கதையை பல காலகட்டங்களில் முன்னணி நடிகர்களிடம் கூறியது, என்னுடன் பணியாற்றிய நண்பர்கள் என்று பலருக்கு இது நன்கு தெரியும். இவை அனைத்துமே 2022-ற்கு முன்பே நடந்தவை. அனைவரிடமிருந்தும் சாட்சிகள் உள்ளன.

ஒரு படத்தை எடுப்பது மிக மிக கடினம். அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் மிக மிகக் கடினம். இதையெல்லாம் தாண்டி இது போன்ற சதி அவதூறுகளைச் சமாளிப்பது மனக்கஷ்டத்தை ஏற்படுத்துகிறது. மேற்கொண்டு இதில் தெளிவோ ஆதாரங்களோ வேண்டுமெனில் தேவையான முறையான இடத்தில் மட்டுமே சமர்பிப்பது நன்று என்று தோன்றுகிறது.

மக்களும், ஊடக நண்பர்களும் என் தரப்பு கருத்தினை அறிந்து கொள்ளவே இப்பதிவு. இந்த சர்ச்சை பதிவுகளுக்கும், சதி அவதூறுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இன்னொருவர் கதையை/திரைக்கதையைத் திருடி எழுத வேண்டிய இயலாமை எனக்கில்லை’ என்று தெரிவித்துள்ளார் அருண்பிரபு.

this is wrong a conspiracy shakthi thirumagan director
this is wrong a conspiracy shakthi thirumagan director