மூத்த நடிகர் திருமாவளவன் அவர்கள் நடித்த திரைப்படம்: விஜய் ரசிகர்கள் பகிர்வு
மூத்த நடிகர் திருமாவளவன் அவர்கள் என, விஜய் ரசிகர்கள் இணையத்தில் பகிர்வது வைரலாகி வருகிறது. இது குறித்த தகவல்கள் காண்போம்..
தவெக கட்சி தொடங்கிய விஜய், விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநாட்டில் பரபரப்பாக முழங்கியது தெரிந்ததே.
தற்போது, ஆட்சியில் உள்ள திமுகவை விஜய் நேரடியாகவே விமர்சித்தார். இதற்கு திமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். விசிகவினரும் விஜய்யின் பேச்சுக்கு அரசியல் ரீதியாக பதிலடி கொடுத்து வந்தாலும், நேரடியாக இவர்கள் இருவருக்கு இடையில் இதுவரை மோதலோ இணக்கமோ ஏற்படவில்லை.
அண்மையில் வெளியான தகவலில், விசிக தலைவர் திருமாவளவன் புத்தகத்தை வெளியிட, அதனை தவெக தலைவர் விஜய் பெற்றுக்கொள்ள உள்ளார் என்ற தகவல் வெளியானது. இதனை விசிக தலைவர் திருமாவளவன் உறுதி செய்தார்.
முன்னதாக, விஜய் கட்சியின் மாநாடு நடைபெற்றபோது, ஊடகங்கள் அவற்றை மையப்படுத்தி பல செய்திகளை வெளியிட்டன. பல ஊடகங்கள் லைவ் டெலிகாஸ்ட் செய்தனர்.
இதனை விசிக தலைவர் திருமாவளவன் ‘ஒரு நடிகர் கட்சி தொடங்கி, ஒரு ஆண்டுகூட ஆகவில்லை. அவரது கட்சி மாநாட்டினை லைவ் டெலிகாஸ்ட் செய்கின்றார்கள். அது தொடர்பாக விவாதங்கள் நடத்துகின்றார்கள்.
ஆனால், தமிழ்நாடு அரசியலின் திசைவழிப் போக்கினை தீர்மானிக்கும் சக்தி படைத்த விசிகவின் மது ஒழிப்பு மாநாடு குறித்து, ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை’ என குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், விஜய் ரசிகர்கள் திருமாவளவன் கதாநாயகனாக நடித்த இரண்டு படங்களையும், அதில் வரும் காட்சிகளையும் இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.
திருமாவளவன் கடந்த 2007-ம் ஆண்டு ‘அன்புத்தோழி’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். பின்னர் 2011-ம் ஆண்டு வெளியான ‘மின்சாரம்’ திரைப்படத்தில் முதலமைச்சராக நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் காட்சிகளை விஜய் ரசிகர்கள் பகிர, இதனைப் பார்த்த பலரும் திருமாவளவன் சினிமாவில் நடித்துள்ளாரா? என கேட்டு வருகின்றனர். மேலும், திருமாவளவனும் நடிகர்தான் எனவும் பதில் அளிப்பது வைரலாகி தெறிக்கிறது.