அந்த ஒரு வார்த்தையால், எனக்கு இந்த வாழ்க்கை கிடைத்திருக்கிறது: நடிகர் சூர்யா நெகிழ்ச்சி..
இயக்குனர் பாலா குறித்து, சூர்யா பேசிய நினைவலைகள், தற்போது வைரலாய் பாய்கிறது. இதன் விவரம் பார்ப்போம்..
இயக்குனர் பாலாவின் வணங்கான் படத்தின் இசை வெளியீடும், அவரின் 25 ஆண்டுகால திரை வாழ்க்கையைக் கொண்டாடும் நிகழ்வும் சென்னையில் நடந்தது. இதில் சூர்யா, மணிரத்னம், மிஷ்கின் மற்றும் பாக்யராஜ் உள்ளிட்ட ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு பேசினர். இவ்விழாவில் பங்கேற்ற நடிகர் சூர்யா பேசியதாவது:
‘இயக்குநர் பாலாவின் ‘சேது’ படம் எனக்குள் ஒரு தாக்கத்தை உண்டு பண்ணியது. இப்படியெல்லாம் ஒரு நடிகரால் நடிக்க முடியுமா? இப்படியொரு படத்தை இயக்க முடியுமா என எனக்குள் தோன்றியது. அப்படத்தின் தாக்கம் பல நாட்களாக இருந்தது.
நெய்காரன்பட்டியில் 2000-ம் ஆண்டு படப்பிடிப்பில் இருந்த சமயத்தில் ஒரு போன் கால் வந்தது. அதில், ‘அடுத்த படத்தை உன்னை ஹீரோவாக வைத்து பண்ணுகிறேன்’ என பாலா சார் சொன்னார்.
ஒரு வார்த்தை எல்லாவற்றையும் மாற்றியது. அந்த தொலைபேசி அழைப்பு எனக்கு 2000-ம் ஆண்டு வரவில்லை என்றால், இந்த வாழ்க்கை எனக்கு கிடைத்து இருக்காது. ‘நந்தா’ பார்த்துவிட்டு தான் கெளதம் மேனன் ‘காக்க காக்க’ படத்திற்கு நடிக்க அழைத்தார்.
அதன் பிறகு, ‘என்னுடைய சஞ்சய் ராமசாமி இங்கதான் இருக்கிறார்’ என முருகதாஸ் சார் கூப்பிட்டார். இவை எல்லாவற்றிற்கும் காரணம் இயக்குநர் பாலா அண்ணன் தான்.
பாலா அண்ணன் என்பது வெறும் வார்த்தையல்ல. அது ஒரு உறவு. நிரந்தரமான உறவு. இந்த வாழ்க்கை கொடுத்ததுக்கு என்னுடைய அன்பும், மரியாதையும் எப்போதும் இருக்கும். முக்கியமான படமாக ‘வணங்கான்’ இருக்கும்’ என்றார்.
அத்துடன் இயக்குனர் பாலாவை மேடையில் சூர்யா கை பிடித்து அழைத்து வந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இவையெல்லாம் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. முன்னதாக ‘வணங்கான்’ படத்தில் சூர்யா நடிக்கவிருந்தார். படப்பிடிப்பும் துவங்கி சில நாட்களாக நடந்தது.
ஆனால், சில நாட்களில் வணங்கானில் இருந்து சூர்யா விலகினார். இது தொடர்பாக, பாலா அறிக்கையொன்று வெளியிட்டிருந்தார். பின்னர், அருண் விஜய்யை வைத்து வணங்கானை இயக்கி முடித்துள்ளார் பாலா.
இந்நிலையில், சூர்யா தற்போது ‘பாலா 25’ நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியுள்ளது திரை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும், சூர்யாவின் பேச்சும் வைரலாகி தெறிக்கிறது.
![suriya praised director bala at vanangaan movie audio launch](https://kalakkalcinema.com/wp-content/uploads/2024/12/vana4.avif)