என் மகளை நினைத்து, அழுது கொண்டேயிருந்தேன்: சூர்யா நெகிழ்ச்சி..

‘நீ மட்டும் ஆறுதல் கூறுவதாக இருந்தால், நாளெல்லாம் அழுதுகொண்டே இருக்கலாம் போலிருக்கிறது’ என்ற பேரன்பில்தானே வாழ்க்கை உயிர்த்திருக்கிறது. இப்ப, விஷயத்திற்கு வருவோம்..
சூர்யா-ஜோதிகா காதல் தம்பதிக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் உள்ளனர். இதில், தியா தற்போது பள்ளிப் படிப்பை முடிக்க உள்ளார். தேவ்வும் படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இருவரும் மும்பையில் படித்து வருகிறார்கள்.
பிள்ளைகளின் படிப்புக்காக, சூர்யா தன் குடும்பத்தோடு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். சூர்யா, பான் இந்தியா படங்களில் நடிக்க, ஜோதிகா பாலிவுட்டில் வெப் தொடர்களில் நடித்து வருகிறார்.
ஜோதிகா நடிப்பில் வெளிவந்த ‘டப்பா காட்ரில்’ என்கிற வெப் தொடர் வரவேற்பை பெற்றது. அதேபோல், சூர்யா நடிப்பில் வெளியான ‘ரெட்ரோ’ படமும் வெற்றிநடை போட்டு வருகிறது.
இந்நிலையில், சூர்யா தனக்கு மிகவும் பிடித்த பாடல் பற்றித் தெரிவிக்கையில், ‘நான் குறிப்பாக சோகப் பாடல்களை நிறைய கேட்பேன். அது எனக்கு பிடிக்கும். என்னுடைய மகள் தியா விரைவில் மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்ல உள்ளதால், சமீபகாலமாக சித்தா படத்தில் இடம்பெற்ற ‘என் பார்வை உன்னோடு’ பாடலை அடிக்கடி கேட்கிறேன்.
‘ரெட்ரோ’ படப்பிடிப்பின்போது ஒரு நாள் நள்ளிரவு 3 மணியளவில் அந்த பாடலை கேட்டுக் கொண்டிருந்தபோது, என் மகள் தியாவிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்தது. மகளை நினைத்து பாடல் கேட்டுக் கொண்டிருக்கும்போது, மகளிடம் இருந்து திடீரென வந்த அந்த மெசேஜால் எமோஷனலாகி நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தேன்’ என்றார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், உணர்வுப்பூர்வமாக உருவாக்கப்படும் பாடல்கள், நம் வாழ்க்கையின் நினைவுகளாக நீடிக்கக்கூடியது’ என நெகிழ்ச்சியுடன் சூர்யா தெரிவித்துள்ளார். இந்நிகழ்வு தற்போது ரசிகர்களால் வைரலாகி வருகிறது.
