
‘ஜனநாயகன்’ விஜய் ஏந்திய நெருப்பு போல, ‘பராசக்தி’யில் எஸ்கே கையில் நெருப்பு
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் டீசர் நாளை வெளியாகிறது. இது குறித்த அப்டேட்ஸ் பார்ப்போம்..
சுதா கங்கோரா இயக்கத்தில் எஸ்கே நடிக்கும் படத்தில் ரவி மோகன் வில்லன் அவதாரம் எடுப்பதாக கூறப்படுகிறது. மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் அதர்வா நடிக்க, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘புஷ்பா-2’ கிஸ்ஸிக் பாட்டுக்கு ஆடிய ஸ்ரீலீலா இணைகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், சமீபத்தில் படத்தின் டைட்டிலை வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு ‘பராசக்தி’ என பெயரிடப்பட்டுள்ள நிலையில், சில சிவாஜி ரசிகர்கள் தலைப்பை மாற்ற வேண்டும் என கூறி வருகின்றனர்.
தற்போது, இந்த படம் குறித்த மற்றொரு அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, ‘பராசக்தி’ படத்தின் டீசர் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என புதிய போஸ்டருடன் படக்குழு அறிவித்துள்ளது.
அந்த போஸ்டரில் “தீ பரவட்டும் நாளை மாலை 4 மணி முதல்” என வாசகம் இடம்பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன் ஒரு போராளி போல், கையில் பாட்டில் வைத்து நின்று கொண்டிருக்க அவர் வைத்திருக்கும் பாட்டிலில் நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது.
முன்னதாக, விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ‘விஜய் போராளி போல், கையில் தீப்பந்தம் பற்றியெரிய நின்று கொண்டிருந்தார்’ என்பது நினைவுகூரத்தக்கது.