இது எனக்கு ஒரு ஆரம்பம் தான்- வெற்றியில் நெகிழ்ந்த சித்து!

Web Ads

சமீபத்தில் வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படமான ‘தி டார்க் ஹெவன்’ ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் வரவேற்பால் வெற்றிப் பாதையில் பயணித்து வருகிறது. பாலாஜி இயக்கியுள்ள இப்படத்தில் பிக்பாஸ் புகழ் சித்து, தர்ஷிகா, ரித்விகா உள்ளிட்டோருடன் பிரதீப், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி. சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால், ஆர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் தயாரிக்கப்பட்ட இப்படத்திற்கு மணிகண்டன் பிகே ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பையும், சக்தி பாலாஜி இசையையும் கவனித்துள்ளனர்.

வித்தியாசமான க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஊடகங்களிடையே பாராட்டுகளும், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து படத்தின் திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்ற நிகழ்ச்சியில் படக்குழுவினர் ஊடகங்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் ஜி. தனஞ்ஜெயன், பல படங்கள் வெளியான சூழலிலும் ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். சிறு முதலீட்டுப் படங்களுக்கும் திரையரங்குகள் கிடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இயக்குநர் பாலாஜி பேசுகையில், படப்பிடிப்பு 60 முதல் 70 சதவீதம் நிறைவடைந்த நிலையில் பல்வேறு காரணங்களால் படத்தை மீண்டும் உருவாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக தெரிவித்தார். அந்தக் கடினமான காலகட்டத்தில் தயாரிப்பாளர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் படக்குழுவினர் அளித்த ஆதரவால்தான் படம் முழுமை பெற்றதாக கூறினார்.

Web Ad 2

மேலும், படத்தின் ஒளிப்பதிவாளர் மணிகண்டன், எடிட்டர் ராஜா ஆறுமுகம் மற்றும் இசையமைப்பாளர் சக்தி பாலாஜி ஆகியோரின் பங்களிப்பை இயக்குநர் வெகுவாக பாராட்டினார். குறிப்பாக சக்தி பாலாஜியின் இசைக்கு கிடைத்து வரும் வரவேற்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவர் எதிர்காலத்தில் பெரிய அளவில் வருவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

நடிகை தர்ஷிகா, ஊடகங்கள் படம் குறித்து தெரிவித்த நேர்மறையான கருத்துகள் ரசிகர்களிடம் சென்றடைந்து, அதன் மூலம் திரையரங்குகளில் கூட்டம் அதிகரித்துள்ளதாக கூறினார். ‘தி டார்க் ஹெவன்’ தனது முதல் படமாக அமைந்திருப்பதில் பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார்.

நடிகை ரித்விகா பேசும்போது, சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் படத்தைப் பற்றி பதிவிட்டு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். திரைப்படங்களை ஓடிடியில் பார்ப்பதற்காக காத்திருக்காமல் திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும் என்றும், அப்போதுதான் திரையரங்கு அனுபவத்தையும் சினிமாவின் வளர்ச்சியையும் உறுதி செய்ய முடியும் என்றும் கூறினார்.

படத்தின் நாயகன் சித்து, சினிமா வாய்ப்புக்காக 14 ஆண்டுகளாக காத்திருந்ததாக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். பல ஆண்டுகள் வாய்ப்பு தேடி அலைந்த தனக்கு, தற்போது பல்வேறு ஊர்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளைப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்தார். இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இயக்குநர் பாலாஜியை குறிப்பிட்டு, அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பிகே, தயாரிப்பாளர்கள் ஷரண், கோபால், இசையமைப்பாளர் சக்தி பாலாஜி மற்றும் நடிகர்கள் வேல ராமமூர்த்தி, ஜெயக்குமார், ஆர்த்தி, சுமித்ரா, பிரதீப், விவேக், செல்வா, மனோஜ், அலெக்ஸ், டேனி உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

Sidhdhu Gets Emotional Over ‘The Dark Heaven’ Success