Web Ads

ரொம்ப பாசிட்டிவ்வா செம எனர்ஜியா நான் இருக்கிற ரகசியம்: சூப்பர் ஸ்டார் பேச்சு வைரல்..

தனது நிலையான ஆற்றலுக்கான ரகசியம் கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இது குறித்துப் பார்ப்போம்..

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து 74 வயதிலும் மின்னலாக ‘ஜெயிலர்-2’ பட பணியில் இணைகிறார். மேலும், அடுத்தடுத்த கமிட்மென்ட் குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கிரியா யோகா குறித்து ‘சூப்பர் ஸ்டார்’ பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் ஆன்மிகத்தில் அதீத ஈடுபாடு கொண்டவர். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இமயமலையில் உள்ள ஆசிரமங்களுக்கு சென்று யோகா செய்வார்.

அந்த வகையில் சமீபத்தில் ஜார்கண்டில் உள்ள ஒய்.எஸ்.எஸ்.ராஞ்சி ஆசிரமத்துக்கு சென்றார். அங்கு ஒரு வாரம் வரை தங்கியிருந்தார். தனது அனுபவத்தை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். இதனை தற்போது ராஞ்சி ஆசிரமம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ரஜினி பேசியிருப்பதாவது:

‘ஒய்.எஸ்.எஸ். ராஞ்சி ஆசிரமத்துக்கு 3 தடவை வந்துள்ளேன். பரமஹம்ச யோகானந்தாஜியின் அறையில் அமர்ந்து யோகா செய்யும் பாக்கியம் கிடைத்தது. அந்த அனுபவத்தை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது.

14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆசிரமத்துக்கு வந்துள்ளேன். இனி வருடாவருடம் இங்கு வந்து, சுமார் ஒரு வாரம் தங்குவது என்று முடிவு எடுத்துள்ளேன்.

நான் மிகவும் ‘வைப்’ ஆக இருப்பதாகவும், என்னை பார்த்தால் ஒரு ‘பாசிட்டிவ் வைப்’ வருகிறது என்கிறார்கள். அதன் ரகசியமே நான் ‘கிரியா யோகா’ பயிற்சி செய்து வருவது தான். 2002-ம் ஆண்டு முதல் கிரியா யோகாவில் ஈடுபட்டு வருகிறேன்.

தொடக்கத்தில் எனக்கு எந்த மாற்றமும் தெரியவில்லை. ஆனாலும், நிறுத்தவில்லை. ஒருகட்டத்தில், அதாவது 12 வருடங்கள் ஆன பிறகுதான் மாற்றத்தை உணர முடிந்தது. எனக்குள் ஒரு நிம்மதி, அமைதி இருந்தது.

கிரியா யோகாவின் சக்தி என்பது, அதை தெரிந்து கொண்டவர்களுக்கு நன்றாகவே தெரியும். இது ஒரு பரம ரகசியம். இது எல்லோருக்குமே பயன்பட வேண்டும். நல்ல குருவை நாம் தேடிக் கண்டுபிடித்து விட்டால், பிறகு அவர்களை நாம் விட்டாலும், நம்மை அவர்கள் விட மாட்டார்கள்’. இவ்வாறு ரஜினி தெரிவித்துள்ளார்.

rajinikanth visit kriya yoga centre viral speech
rajinikanth visit kriya yoga centre viral speech