சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து நடிகர் ரஜினி கூறியிருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஏராளமான பலமொழி உச்ச நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இதனால் இப்படம் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது.

ஏற்கனவே அனிருத் இசையமைப்பில் வெளியான இப்படத்தின் மூன்று பாடல்களும் இணையதளத்தில் சக்கை போடு போட்டு வரும் நிலையில் நேற்றைய தினம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் அப்போது, “சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது எனக்கு எப்பொழுதுமே பிரச்சனை தான் எனக் கூறியிருக்கிறார். மேலும் அதில், இந்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை வேண்டாம் என்று சொன்னால் ரஜினி பயந்துவிட்டார் என்று கூறினார்கள். ஆனால் நான் பயப்படுவது இரண்டே பேருக்குதான், ஒன்று கடவுள் மற்றொன்று நல்ல மனிதர்கள் என்று கூறியிருக்கிறார். இவ்வாறு சூப்பர் ஸ்டார் பட்டத்தின் சர்ச்சை குறித்து அந்நிகழ்ச்சியில் உரையாடி ரஜினியின் பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.