ரஜினி, கமல் இணையும் பட புரொமோ இன்று வெளியீடு: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..
தமிழ்த்திரையுலக ஜாம்பவான்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தை ‘ரெட் ஜெய்ண்ட் மூவிஸ்’ நிறுவனம் தயாரிக்கின்றது. நெல்சன் இயக்குவதாகவும், அதற்கான புரோமோ படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இப்படம் குறித்த மாஸ் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டு உள்ளது.
இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், இன்று மதியம் 12.07 மணிக்கு அதிரடியாக அப்டேட் ஒன்று வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் போஸ்டரில் 21.02.2026 என தேதி குறிப்பிடப்பட்டு உள்ளதால், இன்று சனிக்கிழமை பிப்ரவரி 2-ந்தேதி இந்தப் படத்தின் புரோமோ வீடியோ வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தின் வீடியோ இன்று 12.7-க்கு வெளியாகும் என புது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
அந்த போஸ்டரில் தங்க வாட்ச் அணிந்த ஒரு கையும், மோதிரம் அணிந்த ஒரு கை என ரஜினி, கமல் இருவரின் கை தெரிகிறது. தற்போது வெளியாகி இருக்கும் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரஜினியின் பிறந்த நாள் டிசம்பர் 12-ந் தேதி, கமலின் பிறந்த நாள் நவம்பர் 7-ந் தேதி என்பதால், இருவரின் பிறந்த நாளை குறிக்கும் வகையில் படத்தின் ப்ரோவை படக்குழு சரியாக 12.7 மணிக்கு வெளியிட உள்ளது.
அந்த படத்தில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் அவர்களது பொற்காலமான 1980-களின் லுக்கில் தோன்ற இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக, அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும், நெல்சன் திலீப்குமாரின் திரைப்படம் போல, நகைச்சுவை கலந்த ஆக்ஷன் படமாக உருவாக இருப்பதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
