ஜெயலலிதா ஆட்சி பற்றி நான் அப்படி பேசியிருக்கக் கூடாது: ரஜினியின் திடீர் தெளிவுரை

‘அப்படி நான் பேசியிருக்கக் கூடாது, அப்போதைக்கு எனக்கு தெளிவு இல்லை’ என இப்போது தெரிவித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இது பற்றிய தகவல்கள் காண்போம்..

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை, தான் எதிர்த்ததற்கும் அவருக்கு எதிராக பேசியதற்குமான காரணத்தை ரஜினிகாந்த் தற்போது தெரிவித்திருக்கிறார்.

தமிழக முன்னாள் அமைச்சரும் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் நினைவுகள் குறித்து ‘ஆர்எம்வி கிங் மேக்கர் தி டாக்குமெண்டரி’ என ஒரு ஆவணப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த வீடியோவில் ரஜினிகாந்த்..

ஆர்எம்வி கிங்மேக்கர் தி டாக்குமெண்டரியில் அவரைப் பற்றி பேசுவது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு ரொம்ப நெருக்கமானவங்க, அன்பு காட்டுனவங்கனா நாலஞ்சு பேர் இருக்காங்க. அதுல பாலச்சந்தர் சார், பஞ்சு அருணாச்சலம் சார், ஆர்எம் வீரப்பன் சார் ஆகியோர் தான்.

அவங்க இப்போது இல்லைங்கறதுனால நான் ரொம்ப மிஸ் பண்றேன்.1995 வருஷம் பாட்ஷா படத்தோட நூறாவது நாள் விழா நடைபெற்றது. அதுல தயாரிப்பாளர் வீரப்பன் கலந்து கொண்டிருந்தார்.

அப்போது மேடையில் அவர் இருக்கும்போது, தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் பற்றி நான் பேசியிருந்தேன். அப்போ ஆர்எம் வீரப்பன் அதிமுக அமைச்சரவையில இடம் பெற்றிருந்தார். அமைச்சரை மேடையில வச்சுக்கிட்டு நான் அப்படி பேசியிருக்க கூடாது. அது எனக்கு அப்போதைக்கு தெளிவும் இல்லை.

அப்போ மேடையில வெடிகுண்டு கலாச்சாரத்தை பத்தி நான் பேசிட்டேன். அதுக்கப்புறம் அமைச்சரவையிலிருந்து ஆர்எம் வீரப்பன ஜெயலலிதா தூக்கிட்டாங்க.

நீங்க மேடையில் இருக்கும்போதே ரஜினி எப்படி வெடிகுண்டு கலாச்சாரம் பற்றி பேசினார் அப்படின்னு சொல்லிட்டு தூங்கிட்டாங்க. எனக்கு இந்த தகவல் தெரிந்ததும், ஒரு மாதிரி ஆடிப் போயிட்டேன். நைட் ஃபுல்லா தூக்கமே வரல. நைட் ஃபுல்லா போன் பண்ணா யாருமே எடுக்கல. காலையில போன்ல பேசினாரு ஆர்எம் வீரப்பன்.

சாருகிட்ட வந்து மன்னிப்பு கேட்டப்போ, ஒன்றுமே நடக்காதது மாதிரி பேசினார். ‘நீங்க எல்லாம் எதையுமே மனசுல வச்சுக்காதீங்க. இன்னைக்கு என்ன ஷூட்டிங்.. சந்தோஷமா இருங்க’ அப்படின்னு சாதாரணமா பேசினார்.

நான் உடனே என்னால தான் உங்களுக்கு இப்படி ஆயிடுச்சு. நான் வேணா ஜெயலலிதா கிட்ட பேசவா அப்படின்னு கேட்டேன். அதற்கு ‘வேணா நீங்க பேசினாலும் அந்த அம்மா ஏத்துக்க மாட்டாங்க. நீங்களா பேசி உங்க மரியாதையை குறைத்துக் கொள்ள வேண்டாம்’ அப்படின்னு பேசினார்.

மேலும் ‘நீங்க பேசி அங்கு நான் போய் சேரணும்னு அவசியம் இல்லை’ அப்படின்னு சொல்லிட்டார். ஆர்எம் வீரப்பன் எப்பேர்பட்ட மனுஷன். அவர் தான் ரியல் கிங்மேக்கர்’ என கூறியிருக்கிறார் ரஜினிகாந்த். தற்போது இந்நிகழ்வு இணையமெங்கும் பெரும் வைரலாகி வருகிறது.

rajini opens up about speaking against rmv documentary