
‘கேம் சேஞ்சர்’ தயாரிப்பாளர் தில் ராஜுவை தொடர்ந்து, ‘புஷ்பா’ இயக்குனர் சுகுமார் வீட்டிலும் ரெய்டு…
பான் இந்திய படமாக வெளிவந்த புஷ்பா வசூலை வாரிக் குவித்துள்ளது. இச்சூழலில், இன்று இப்பட இயக்குனர் சுகுமாரின் வீட்டில் ரெய்டு நடைபெற்றுள்ளது. இது பற்றிய தகவல்கள் வருமாறு:
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தன்னா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்த புஷ்பா 2 படம், தற்போது வரை இந்தியாவில் மட்டும் ரூ.1,200 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது.
இந்நிலையில், இயக்குநர் சுகுமாரின் ஹைதராபாத் வீட்டில் இன்று அதிகாலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
அப்பொழுது சுகுமார் வீட்டில் இல்லை. அவர் விமான நிலையத்தில் இருப்பது தெரிந்து அங்கு சென்று அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தி இருக்கிறார்கள். பல மணிநேரம் சோதனை நடந்திருக்கிறது. ஆனால், அந்த சோதனையில் என்ன சிக்கியது என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
சுகுமார் வீட்டில் நடந்த சோதனை பற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் இதுவரை அறிக்கை வெளியிடவில்லை.
முன்னதாக, நேற்று புஷ்பா 2 படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களான ரவிசங்கர் மற்றும் நவீன் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.
மேலும், ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் சங்கராந்தி ஸ்பெஷலாக வெளியான ‘கேம் சேஞ்சர்’ படத்தை தயாரித்த தில் ராஜுவின் வீடு, அலுவலகங்கள், உறவினர்களின் வீடுகள் என மொத்தம் 8 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று பல மணிநேரம் சோதனை நடத்தினார்கள்.
தில் ராஜு வரி ஏய்ப்பு எதுவும் செய்திருக்கிறாரா? என விசாரணை நடந்திருக்கிறது. கேம் சேஞ்சரை அடுத்து வெளியான வெங்கடேஷின் ‘சங்கராந்திகி வஸ்துன்னம்’ படத்தையும் தில் ராஜு தான் தயாரித்திருந்தார். அனில் ரவிபுடி இயக்கிய ‘சங்கராந்திகி வஸ்துன்னம்’ படம் வசூலை அள்ளி வருகிறது.
வசூலை வாரிக் குவித்து வரும் புஷ்பா 2, கேம் சேஞ்சர், சங்கராந்திகி வஸ்துன்னம் படங்களை தயாரித்தவர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்திருக்கிறது.
தற்போது புஷ்பா 2 இயக்குநர் சுகுமாரை விமான நிலையத்தில் இருந்து அழைத்து வந்து சோதனை நடத்தும் அளவுக்கு அவர் என்ன செய்துவிட்டார்? என சினிமா ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
புஷ்பா 2 படம் இதுவரை உலக அளவில் ரூ. 1, 800 கோடி வசூல் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
