நடிகர் ராகவா லாரன்ஸ் பகிர்ந்திருக்கும் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ். அவரது நடிப்பில் அடுத்ததாக பி.வாசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் சந்திரமுகி 2 திரைப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் இப்படத்தில் வடிவேலு, ராதிகா சரத்குமார், கங்கனா ராணாவத், லக்ஷ்மி மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

எம் எம் கீரவாணி இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சந்திரமுகி 2 படகுழுவினர் பலரும் கலந்து கொண்டிருந்தனர். அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் இந்நிகழ்ச்சியின் போது கல்லூரி மாணவரை பவுன்சர்கள் தாக்கியதாக வெளியான தகவல் குறித்து மன்னிப்பு கேட்டு ட்விட் செய்திருக்கும் ராகவா லாரன்ஸின் பதிவு வைரலாகி வருகிறது. அதில் அவர், சந்திரமுகி2 திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது பவுன்சர் ஒருவர் கல்லூரி மாணவனுடன் சண்டையில் ஈடுபட்ட அசம்பாவித சம்பவத்தை நான் அறிந்தேன். எனக்கும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் இந்த சம்பவம் பற்றி தெரியாது. அது வெளியில் நடந்திருக்கிறது. இதுபோன்ற சண்டைகளுக்கு நான் எதிரானவன் தான். அமைதி மற்றும் மகிழ்ச்சி எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும் என விரும்புபவன் நான். அவர் மாணவர் என்பதால் இது நடந்திருக்கவே கூடாது. இந்த சம்பவத்திற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் இப்படி நடக்கவேண்டாம் என பவுன்சர்களை கேட்டுக்கொள்கிறேன். என கூறி இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.