விஜய்யின் மகன் ஹீரோவாக நடிக்கும் ‘குஷி-2’ : தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் விருப்பம்..

காதல், காமெடி, இசை, பாடல், காட்சியமைப்பு என அனைவராலும் ஈர்க்கப்பட்ட படம் குஷி.
விஜய்-ஜோதிகா நடிப்பில், எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில், ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற படம்.
இப்படம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் சார்பில் சக்திவேலன் வெளியிடுகிறார். இதை அறிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பேசும்போது,
‘தமிழில் வெற்றியைத் தொடர்ந்து, தெலுங்கு, இந்தியிலும் எஸ்.ஜே. சூர்யா தான் இயக்கினார். ஜோதிகா, பூமிகா இருவரது நடிப்பிலும் இயக்குநர் சூர்யா தான் தெரிவார். இப்படத்துக்கு தேவா சார் இசை என்றால் நம்ப முடியாது. விஜய் அப்போது டாப் ஹீரோ. ‘கதையில் சண்டைக் காட்சிகள் இல்லை, வையுங்கள்’ என விஜய் கூறினார்.
ஆனால், சூர்யா, ‘இது லவ் ஸ்டோரி, வைக்க முடியாது’ என கூறிவிட்டார். ஆனால், விஜய் விடுவதாக இல்லை. தற்போது ‘குஷி – 2’ படம் எடுத்தால் நன்றாக இருக்கும். அதையும் எஸ்.ஜே. சூர்யாவே இயக்க வேண்டும். அதில் விஜய் சார் நடித்தாலும் சரி, அல்லது அவருடைய மகன் நடித்தாலும் சரி, அல்லது வேறு யார் நடித்தாலும் முதல் பாகத்தைப் போலவே படம் மிகப்பெரிய வெற்றிபெறும்’ என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
விஜய்யின் மகன் தற்போது இயக்குநராக அறிமுகமாக உள்ளார். இதற்கான படப்பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், ஏ.எம்.ரதனம் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். விஜய்யின் மகன் குஷி-2 படத்தில் ஹீரோவாக நடிப்பாரா என விஜய்யின் ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர். பொறுத்திருந்து பார்க்கலாம்.
