MK Stalin slams
MK Stalin slams

MK Stalin slams – சென்னை : சிபிஐ விசாரணைக்கான அரசாணையில் பொள்ளாச்சி விவகாரத்தில், புகார் தந்த பெண் பெயரை குறிப்பிட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடுமுழுவதும் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தற்போது வரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்த வழக்கை நேற்று முன்தினம் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

பொள்ளாச்சியை சேர்ந்த சபரிராஜன் என்பவர், பேஸ்புக் நண்பராக பழகி வந்த ஒரு கல்லூரி மாணவியை தனியாக வரவழைத்து, நண்பர் உதவியுடன் ஆபாசமாக படம் பிடித்து பணம் கேட்டு மிரட்டிய வழக்கில், திருநாவுக்கரசு நண்பர்கள் சதீஸ், வசந்தகுமார், சபரிராஜன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்ற காவலில் உள்ள இவர்களில், 3 பேரின் நீதிமன்ற காவல் நேற்று முடிவடைந்த நிலையில் அவர்களுக்கு மீண்டும் காவல் நீடிக்கப்பட்டது.

இதற்கிடையே அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், லேப்டாப்களிலிருந்து ஏராளமான போட்டோக்களும், வீடியோக்களும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகின.

அதில் கைது செய்யப்பட்ட 4 பேர் மட்டுமின்றி மேலும் பலர் சேர்ந்து சுமார் 250க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றி, மிரட்டி பணம், நகை பறித்தது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை சிபிசிஐடியில் இருந்து சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக இன்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் புகார் தந்த அந்த பெண் பெயரை குறிப்பிட்டதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, “பாலியல் குற்ற வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் பெயரை வெளியிடக்கூடாது என்று உச்சநீதிமன்ற ஏற்கனவே உத்தரவு வழங்கியிருந்தது.

உச்சநீதிமன்ற உத்தரவை அப்பட்டமாக மீறும் வகையில் அரசாணையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது” . இவ்வாறு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.