போதைப் பொருள் கடத்தல் வழக்கு: மன்சூர் அலிகான் மகனுக்கு ஜாமீன்..
மன்சூர் அலிகானின் மகன் மீதான வழக்கில், இன்று நீதிபதி பிறப்பித்த உத்தரவு காண்போம்..
தமிழ்த்திரையில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து பிரபலமானவர் மன்சூர் அலிகான் என்பது தெரிந்ததே.
இந்நிலையில், முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருட்களை விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்களின் செல்போனை வாங்கி சோதனை செய்தபோது, அதில் நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் பெயர் இருந்தது.
பின்னர், அவருக்கும் இந்த போதைப்பொருள் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்த நிலையில், கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
அப்போது நடிகர் மன்சூர் அலிகான் போதைப் பொருள் பயன்படுத்துவது தவறு என்பது உனக்கு தெரியாதா? ஏன் இப்படியெல்லாம் செய்கிறாய்? என அறிவுரை கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், துக்ளக் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக துக்ளத்துக்கு ஜாமீன் பெற கடந்த மாதம் மனு தாக்கல் செய்த நிலையில், போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு நீதிமன்றம் இதனை தள்ளுபடி செய்தது.
இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, “அலிகான் துக்ளக்கிடம் இருந்து எந்த ஒரு போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும், மற்ற குற்றவாளிகள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர் போதை பொருள் வைத்திருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லாததால், நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிடுகிறது’ என கூறினார்.