விஷால் நடித்து இயக்கிய ‘மகுடம்’ படப்பிடிப்பு நிறுத்தம்..
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘மகுடம்’. இதன் படப்பிடிப்பில் மோதல் ஏற்பட்டதால், இப்படத்தினை விஷாலே இயக்கி வருகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தீபாவளி அன்று விஷால் வெளியிட்டார்.
கதை மட்டுமே ரவி அரசு எனவும், திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் விஷால் எனவும் படத்தின் போஸ்டரில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
தற்போது விஷால் – ரவி அரசு இடையே மோதல் முற்றியுள்ளது. இதனால் ‘மகுடம்’ படத்தின் படப்பிடிப்பினை பெப்சி அமைப்பு மற்றும் இயக்குநர்கள் சங்கம் இணைந்து நிறுத்தி இருக்கிறார்கள். ரவி அரசு இடமிருந்து படத்தினை விஷால் இயக்க ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே தொடங்க முடியும் என்று கூறியிருக்கிறார்கள். இதனால், மீண்டும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.
இப்படத்தில் துஷாரா விஜயன் நாயகியாக நடித்து வருகிறார். இதன் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு படத்தினை வெளியிட திட்டமிட்டு இருந்தார்கள்.

