சென்னை குறித்து தோனி பேசிய நெகிழ்ச்சியான தகவல்கள் இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி அவர்கள் அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியுடன் இணைந்து புதிதாக தொடங்கியிருக்கும் தயாரிப்பு நிறுவனத்தில் முதல் படமாக தமிழில் “லெட்ஸ் கெட் மேரிட் (LGM)” என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கியிருக்கிறார். இதில் கதாநாயகனாக நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்க அவருக்கு ஜோடியாக லவ் டுடே திரைப்படத்தின் கதாநாயகி இவானா நடித்திருக்கிறார். மேலும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர் .

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று நிறைவடைந்ததை தொடர்ந்து சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள், டீசர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நேற்றைய தினம் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

அதில் LGM படகுழுவினருடன் தோனி தனது மனைவியுடன் கலந்து கொண்டார். அப்போது அந்நிகழ்ச்சியில் பேசிய தோனி “என்னுடைய டெஸ்ட் அறிமுகம் சென்னையில்தான் நடந்தது. என்னுடைய அதிகபட்ச ஸ்கோரை சென்னையில்தான் ஸ்கோர் செய்தேன். ஐ.பி.எல். போட்டி நடந்த போது என்னை தமிழகம் தத்தெடுத்தது. இப்பொழுது என்னுடைய முதல் படமும் தமிழில் தான் வருகிறது” என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார். அது தற்போது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.