‘லெக் பீஸ்’ டேஸ்ட்டாகிதா? கடுப்பாகிதா?: திரை விமர்சனம்
‘பசி வந்தால் பத்தும் மறந்து போகும்’ என்பது இயல்பு. ஆனால், பணம் வந்தால் நட்பு மறந்து போகலாமா?. அதனால் உருவாகும் திகில் நிகழ்வுகளில் காமெடி மசாலா கலந்து தியேட்டர் என்ற பிளேட்டுக்கு சூடாக வந்திருக்கிறது ‘லெக் பீஸ்’. இது எப்டின்னு இப்ப ருசி பார்ப்போம்..
‘குயில்’ என்ற சவுரி முடி வியாபாரி மணிகண்டன்; கிளி ஜோதிடர் கருணாகரன்; பேய் விரட்டுவர் ஸ்ரீநாத்; மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ரமேஷ் திலக். இவர்கள் நால்வரும் வறுமைசூழ் வாழ்வில் வயிற்றுப் பிழைப்புக்காக அலைகின்றனர்.
இந்நிலையில், சாலையில் கிடந்த 2000 ரூபாய் நோட்டினால் நண்பர்கள் ஆகின்றனர். அப்றமென்ன, டாஸ்மாக்கில் சரக்கடித்து பார் ஓனர் மொட்டை ராஜேந்திரனிடம் 2000 ரூபாய் நோட்டை கொடுக்க, அவர் இது கள்ளநோட்டு எனக் கூறி ஆத்திரத்தில் நாலு பேரையும் கொன்று விட அடியாட்களுக்கு உத்தரவிடுகிறார்.
அங்கே, சற்று நேரத்தில் போலீஸாரான மைம்கோபியும், மாரிமுத்துவும் வருகிறார்கள். இந்நேரத்தில் எதிர்பாராமல் வந்த இரண்டு மர்ம நபர்கள் மொட்டை ராஜேந்திரன், மைம்கோபி உள்பட அனைவரையும் கொன்று விடுகின்றனர்.
இந்த கொலைகளை நேரில் பார்த்த சீரியஸ் காமெடிகளான நாலு பேரும், ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பதுபோல குதிங்கால் பிடரியில் பட ஓட்டம் பிடிக்கின்றனர். நடந்த கொலைகளுக்கு இந்த நால்வர் தான் காரணம் என போலீஸார் தேடி வருகின்றனர்.
இச்சூழலில், கொலைகளை செய்த இரண்டு மர்ம நபர்கள் யார்? ஏன் கொலை செய்தனர்? இவர்கள் கைது செய்யப்பட்டனரா? தப்பிச் சென்ற நால்வரின் கதி என்ன?என்பதற்கு தீர்வு சொல்லி கலகலக்கிறது இந்த க்ரைம் ஹியூமர் மூவி.
படத்தில் ‘சிரிப்பு’ என்ற 4 எழுத்தை மட்டுமே பிரதானமாக கொண்டு 4 பேரும் ஜமாய்த்து இருக்கின்றனர். போதாததற்கு யோகிபாபு, விடிவி கணேஷ், ரவி மரியா, சரவண சுப்பையா என அவரவர் பங்குக்கு கிச்சு கிச்சு மூட்டி இருக்கின்றனர். இதில், யோகிபாபு தனது மனைவியைப் பற்றி காமெடி என்ற பெயரில் பேசுவது அருவருப்பாய் முகம் சுழிக்க வைக்கிறது.
மற்றபடி, கையில் காசு இல்லாமல் போனாலும் மனதில் காதல் முளைப்பது மனித உணர்ச்சி தானே. அவ்வகையில், பஞ்சத்தில் உழலும் நால்வருக்குள்ளேயும், காதல் கன்னா பின்னாவென பூத்துக் குலுங்குகிறது, ரசிக்க முடிகிறது.
ஆக, பக்கா லொள்ளும் பலான ஜொள்ளும் படத்தில் சரமாரியாய் தெறிக்கிறது. முதல் பாதியில் தளர்வாகவும் மறுபாதியில் மிடுக்காகவும் பறக்கிறது.
ஆடியன்ஸை உட்கார வைக்க ஸ்கிரிப்ட் ஒர்க் செய்திருக்கும் எஸ்.ஏ. பத்மநாபன் பாராட்டுக்குரியவர்.
இக்கதையை திரில்லிங் பிளஸ் கூலாக இயக்கி, நடிப்பதிலும் கவனம் ஈர்த்திருக்கிறார் ஸ்ரீநாத்.
மேலும் கேமரா பிடித்த மாசாணியும், மியூசிக் கொடுத்த மிஜோர்னும் எடிட் செய்த எஸ். இளையராஜாவும், கடுகு சிரித்தாலும் காரம் குறையாதென சுவைபட கடமையாற்றி உள்ளனர்.
சுருக்கமா சொல்லனும்னா.. ‘பண மதிப்பிழப்புக்கு முன்பு தொடங்கிய கதை, பண மதிப்பிழப்புக்கு பின்பு முடிகிறது’ என்ற ஒற்றைவரியை பெரும் காமெடிப் பட்டாளத்தோடு விவரித்து, விலா நோக சிரிக்க வைத்துள்ளனர்.
மொத்தத்துல ஹீரோயிஸம் காட்டாமல், ஃபேண்டஸி கிராபிக்ஸ் இல்லாமல், பான் இந்திய மூவியென பிரம்மாண்ட புரொமோஷன் பிதற்றாமல், எள்ளுருண்டை பட்ஜெட்டில் ‘கொல்’லென்று சிரிக்கவிட்டு மகிழ்விக்கிறது.!
அதனால, வாங்க.. வாங்குங்க.. அடிக்கிற வெயிலுக்கு லேசா சூடாக்கிது; செம டேஸ்ட்டாக்கிது ‘லெக் பீஸ்’
லெக் பீஸ் திரை விமர்சனம்
- Rating