பா ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி இருக்கும் நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற இருக்கிறது.

சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது இயக்கி முடித்திருக்கும் திரைப்படம் தான் ‘நட்சத்திரம் நகர்கிறது’. இப்படம் முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி உள்ளது. இதில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கலையரசன், ஹரிகிருஷ்ணன், ஷபீர் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

மேலும் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்துக்கு இசையமைப்பாளர் தென்மா இசையமைத்துள்ளார். வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் வெளியாகி அனைவரையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் நட்சத்திரம் நகர்கிறது இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் இன்று (22.08.2022) மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளதாகவும் எங்களுடன் சேர்ந்து கொண்டாடுங்கள் என்றும் இயக்குனர் பா.இரஞ்சித் தனது சமூக வலைத்தளத்தின் மூலம் நேற்று ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.